Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

டி20 உலகக் கோப்பை. பாகிஸ்தானின் கோப்பை கனவை தகர்த்தது ஆஸ்திரேலியா.

0

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டின் 2-வது அரைஇறுதியில் குரூப்-2-ல் முதலிடம் பிடித்த முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் அணி, குரூப்-1-ல் 2-வது இடம் பெற்ற ஆஸ்திரேலியாவுடன் துபாயில் மோதின.

டாஸ் வென்றஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

அதன்படி, பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் ஆசம் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கவீரர் பாபர் ஆசம் 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

எனினும்,தொடர்ந்து சிறப்பாக விளையாடிய முகமது ரிஸ்வான் 52 பந்துகளை சந்தித்து 4 சிக்சர்கள் 3 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய பகர் சமன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 55 (32 பந்துகள்) ரன்கள் எடுத்தார். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தொடர்ந்து 177 ரன்கள் எடுத்தால் இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம் என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணியின் சார்பில் டேவிட் வார்னர் மற்றும் கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஆகியோர் களமிறங்கினர்.

இந்த ஜோடியில் ஆரோன் பிஞ்ச் (0) ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற, அவரைத்தொடர்ந்து களமிறங்கி அதிரடி காட்டிய மிட்செல் மார்ஸ் 28 (22) ரன்களும், அடுத்ததாக களமிறங்கிய சுமித் 5 (6) ரன்களும், தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டேவிட் வார்னர் 49 (30) ரன்களும், மேக்ஸ்வெல் 7 (10) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்ததாக 6-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட் ஆகியோர் இணை, அதிரடியாக விளையாடி ரன் ரேட்டை வேகமாக உயர்த்தி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றனர்.

முடிவில் ஸ்டோய்னிஸ் 40 (31 பந்துகள்) ரன்களும், மேத்யூ வேட் 41 (17 பந்துகள்) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் ஆஸ்திரேலியா அணி 19 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஷதப் கான் 4 விக்கெட்டுகளும், ஷகின் அப்ரிதி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்த போட்டியின் 19வது ஓவரில் மேத்யூ வேட் ஹாட்ரிக் சிக்சர் அடித்து ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இதுவரை 20 ஓவர் உலக கோப்பையை வெல்லாத ஆஸ்திரேலிய அணி அந்த கனவை முதல்முறையாக எட்டும் முனைப்பில் முன்னேறியுள்ளது.

வருகிற 14-ந்தேதி நடக்கும் மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியுடன், ஆஸ்திரேலியா அணி மோத உள்ளது.

லீக் போட்டிகளில் இந்தியா உட்பட அனைத்து அணிகளையும் வென்ற பாகிஸ்தான் அணி அரையிறுதியில் தோற்று தாயகம் திரும்புகிறது.

Leave A Reply

Your email address will not be published.