அதிமுகவை மீட்டு எடுக்க வேண்டும் என்பதுதான் சசிகலா மற்றும் எனது முயற்சி.திருச்சியில் டிடிவி தினகரன் பேட்டி
அதிமுக தொடங்கியது முதல் ஜெயலலிதா மறைவு வரை ஒற்றைத் தலைமையில்தான் இருந்தது. தற்போது மாறியுள்ளது. மீண்டும் எல்லாம் சரியாகும்’ என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள ஜெயம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரிடம் நலம் விசாரிப்பதற்காக டிடிவி தினகரன் நேற்று திருச்சி வந்தார்.
பின்னர், செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் :
எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் டெல்லி பயணத்தின் நோக்கம் என்னவாக இருக்கும்?
இதுகுறித்து நான் என்ன சொல்ல முடியும். அவர்களிடம்தான் கேட்க வேண்டும்.
அமமுக இனியும் தனித்து இயங்குமா அல்லது அதிமுகவுடன் இணைந்து இயங்கவுள்ளதா ?
அமமுக தொடங்கப்பட்டதே அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். அதில் தேர்தல் வெற்றி, தோல்வி எல்லாம் எங்களுக்கு எந்தத் தடையும் ஏற்படுத்த முடியாது. எங்கள் இலக்கை நோக்கி நாங்கள் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருப்போம்.
வி.கே.சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், கே.பழனிசாமி ஆகியோரை இணைக்கும் பணியில் பாஜக ஈடுபட்டு வருகிறதா?
ஊகத்துக்கு நான் பதில் கூற முடியாது.
கட்சியினர் பலரும் கட்சி மாறிச் செல்கிறார்களே?
கொள்கைக்காக என்னுடன் வந்தவர்கள் எல்லாம் என்னுடன் இருக்கின்றனர். சுயநலத்துக்காக வந்தவர்கள், விலை போகக் கூடியவர்கள் விலை போவார்கள். அதையெல்லாம் தாண்டித்தான் ஒரு அரசியல் இயக்கம் செயல்படும். தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இந்த இயக்கம், எங்கள் இலக்கை அடையும் வரை போராடுவோம்.
வி.கே.சசிகலா அதிமுகவின் தலைமைப் பொறுப்புக்கு வருவாரா?
அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் இருவரது முயற்சி.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் நடத்தி வரும் சோதனைகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
உப்பு தின்றவர்கள் யாராக இருந்தாலும் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும். சட்டப்படி எந்த நடவடிக்கை எடுத்தாலும் சரிதான்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்ற பேச்சு வரத் தொடங்கியுள்ளது. அந்த ஒற்றைத் தலைமை வி.கே.சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், கே.பழனிசாமி ஆகியோரில் யாராக இருக்கும்?
ஊகத்துக்கு பதில் அளிக்க முடியாது. ஆனால், அதிமுக தொடங்கியது முதல் ஜெயலலிதா மறைவு வரை ஒற்றைத் தலைமையில்தான் இருந்தது. தற்போது மாறியுள்ளது. மீண்டும் எல்லாம் சரியாகும்.
அரசியலில் இருந்து விலகிவிட்டதாகக் கூறிய வி.கே.சசிகலா, தற்போது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோரிடம் பேசும்போது விரைவில் வந்துவிடுவேன் என்கிறார். அதற்கான வாய்ப்பு எப்போது?
அவரே சொல்வார். அவரைப் பார்க்கும்போது கேளுங்கள்.
தற்போதைய திமுக ஆட்சியில் உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியது எது?
யோசித்துச் சொல்கிறேன். ஆனால், ஒன்றை மட்டும் சொல்கிறேன். எதையெல்லாம் எதிர்த்துப் போராடினார்களோ அவையெல்லாம் திருப்பி வருகின்றன. எனவே, மகிழ்ச்சியைவிடச் சிரிப்பாக உள்ளது. தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் எதிர்த்ததையெல்லாம் மறந்துவிட்டனர்.
இதையெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் உள்ளனர்”.
இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பின்போது திருச்சி மாவட்ட கட்சி நிர்வாகிகள் ஆர்.மனோகரன், சின்னம்மா பேரவை நிறுவனத் தலைவர் ஒத்தக்கடை செந்தில் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.