Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

போலீசாருக்கு 20% சுழற்சி முறையில் ஓய்வு வழங்கப்படும். புதியதாக பொறுப்பேற்ற ஐ.ஜி.பாலகிருஷ்ணன் பேட்டி.

0

சென்னை கிழக்கு மண்டல இணை கமிஷனராக டி.ஐ.ஜி. அந்தஸ்தில் பணியாற்றிய பாலகிருஷ்ணன் பதவி உயர்வு பெற்று திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார்.

இவர் நேற்று மாலை திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் உள்ள மத்திய மண்டல ஐ.ஜி. அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு போலீஸ் சூப்பிரண்டுகள், துணை சூப்பிரண்டுகள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து ஐ.ஜி. பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:

கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கை அமல்படுத்துவது காவல் துறையின் முக்கிய பணியாக இருக்கிறது. ஊரடங்கு காலகட்டத்தில் ஆன்-லைன் வர்த்தகத்தில் சைபர் கிரைம் தொடர்பான குற்றங்கள் அதிகமாக நடக்கின்றன.

இதுகுறித்து பொதுமக்கள் அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். மத்திய மண்டலத்தில் இதுவரை 24 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஊரடங்கின்போது விதிமுறைகளை மீறி ஏதேனும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தால் அவற்றை ஒப்படைக்கவும், போலீஸ் தொடர்பாக பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தெரிவிக்கவும், மத்திய மண்டலத்துக்குட்பட்ட ஒவ்வொரு மாவட்டத்திலும் பொறுப்பு அதிகாரி நியமிக்கப்படுவார்.

பொதுமக்கள் செல்போன் வீடியோகால் மூலம் புகார் தெரிவிக்கும் வசதி மாவட்டம் தோறும் விரைவில் தொடங்கப்படும்.

ஊரடங்கை மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், பொதுமக்களிடம் போலீசார் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். அவர்களிடம் வாக்குவாதம் செய்வதோ, பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதோ கூடாது.

அதேநேரம் ஊரடங்கையும் அமல்படுத்தவேண்டும். இது காவல்துறையினருக்கு சவாலான பணிதான் என்றாலும் திறமையாக செய்ய வேண்டும். மத்திய மண்டலத்தில் காவல்துறையை சேர்ந்த 156 பேர் இதுவரை கொரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இவர்களுக்கு முறையான மருத்துவம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழக டி.ஜி.பி. உத்தரவின்பேரில், கொரோனா காலகட்டத்தில் காவல்துறையில் பணியாற்றி வருபவர்களில் 20 சதவீதம் பேருக்கு சுழற்சிமுறையில் ஓய்வு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் ஏற்கனவே திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.