ஒடிசா மாநிலம் புர்லாவில் மகாநதி நிலக்கரி நிறுவன வளாகம் அமைந்திருக்கிறது. இங்கு பணிபுரியும் ஒரு இளம் பெண் அதிகாரி, தனது இருசக்கர வாகனத்தை தெரு நாய்கள் மோசமாக சேதப்படுத்திவிட்டதாக நிறுவன பாதுகாவலர்களிடம் சில நாட்களுக்கு முன்பு புகார் தெரிவித்தார்.
இந்நிலையில் அந்தப் பெண் அதிகாரியின் வீட்டின் முன்பு 11 தெரு நாய்கள் செத்துக் கிடந்தன. அது அப்பெண் அதிகாரியின் செயலாகத்தான் இருக்க வேண்டும், அவர்தான் அந்த நாய்களுக்கு விஷம் வைத்துக் கொன்றிருக்க வேண்டும் பாதுகாவலர்கள் சந்தேகிக்கின்றனர்.
இதுதொடர்பாக உள்ளூர் பிராணிகள் நல அமைப்பினர் புர்லா போலீசில் புகார் அளித்தனர். ஆனால் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே அவர்கள், பிராணிகள் நல அமைப்பு தலைவரும், மக்களவை எம்.பி.யுமான மேனகா காந்தியிடம் இந்த விஷயத்தில் தலையிடுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
அதைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை தொடர்புகொண்டு பேசிய மேனகா காந்தி, குறிப்பிட்ட பெண் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருக்கிறார்.
அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.