ஊரடங்குக் கட்டுப்பாட்டில் மாற்றம் தேவை!
திமுக அரசு பதவியேற்றதும் அமலாக்கிய ஊரடங்கு பல வகைகளில் மெச்சக்கூடியதாக இருந்தது; ஏனெனில், பெருந்தொற்று காலகட்டத்தில் மக்களின் உயிரைக் காப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் மக்களின் வாழ்வாதாரங்களையும் காத்திடுவது ஆகும்.
மக்களை அலைக்கழிக்காமல் போதிய அவகாசம் தந்தது ஆகட்டும்; அன்றாடம் நண்பகல் 12 மணி வரை கடைகள் இயங்கும் என்ற ஊரடங்கு காலக் கடைகளுக்கான நேர நிர்ணயம் ஆகட்டும்;
அத்தியாவசிய சேவைகளின் பட்டியலில் நடைபாதைப் பூக்கடைகள் வரை உள்ளடக்கப்பட்டது ஆகட்டும்; மேம்பட்ட மனிதாபிமான அணுகுமுறை அதில் வெளிப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக மக்களில் ஒரு பகுதியினர் இதன் அருமையை உணரவில்லை. சாலைகளில் ஊரடங்கு நேரங்களிலும் ஏராளமானோர் சகஜமாகத் திரிந்தார்கள்.
அது தடுத்து நிறுத்தப்பட வேண்டிய அவசியத்தைப் பலரும் சுட்டிக்காட்டியது முதல்வர் ஸ்டாலின் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் வெளிப்பட்டது. விளைவாக ஊரடங்கைத் தீவிரமாக்க தமிழக அரசு உத்தரவிட்டதும் நியாயமானது.
ஆனால், ஊரடங்கைத் தீவிரப்படுத்துதல் எனும் பெயரில் அன்றாட இயக்க நேரத்தை காலை 10 மணிக்குள் சுருக்கியதும், அனுமதிக்கப்பட்ட சேவைகளின் பட்டியலைச் சுருக்கியதும் சரியான நடவடிக்கைகளாக இல்லை.
ஊரடங்கைத் தீவிரப்படுத்த காவல் துறை இப்போது ஏராளமான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகிறது. முன்புபோல அல்லாமல், ஆங்காங்கே ஆட்களை மறித்து விசாரிப்பதும், கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு அபராதம் விதிப்பதும், வழிமறித்து திருப்பியனுப்புவதும் நல்ல பலன்களைத் தருகின்றன.
காலை 10 மணிக்குள் எல்லா கடைகளும் மூடப்படும் என்ற ஏற்பாடானது வணிகர்களுக்கும் அவதி; மக்களுக்கும் அலைக்கழிப்பு. இதனால், பெரும் கூட்டம் கடைவீதிகளில் கூடுகிறது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாததால் தனிமனித இடைவெளியையும் யாராலும் பராமரிக்க முடியவில்லை. சில மணி நேரங்களுக்குள் விற்க முடியாததால் வீணாகும் காய் – கனிகள் உண்டாக்கும் நஷ்டம் வணிகர்களில் தொடங்கி விவசாயிகள் வரை நீள்கிறது.
மேலும், காய்கறி – கனி வண்டிகளுக்கு முன்னதாக அனுமதிக்கப்பட்டிருந்தது விளிம்புநிலையினருக்கான வேலைவாய்ப்பாக அமைந்ததுடன் வீடு தேடி காய் – கனி வண்டிகள் சென்றதால் கடைவீதிகளில் கூட்டம் கொஞ்சம் மட்டுப்படவும் வழிவகுத்தது.
இப்போது அவர்களுக்கான தடை இரு தரப்புக்கும் இழப்பாகியிருக்கிறது. உணவுக் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் போது டீக்கடைகளுக்கோ பழச்சாறுக் கடைகளுக்கோ அனுமதி மறுக்கப்படுவதில் நியாயமே இல்லை.
ஊரடங்கு காலத்தில் எல்லோரும் வீடடங்கி இருந்தாலும், பல்லாயிரம் முன்களப் பணியாளர்கள் பணியாற்றிக்கொண்டு தான் இருக்கிறார்கள்; மருத்துவமனைகளில் பெரும் தொகையினர் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் ஒரு டீ, ஜூஸ் வேண்டும் என்றாலும் அதற்கும் ஒரு கடை திறந்திருக்க வேண்டும் இல்லையா?
வாகனங்களுக்குக் காற்று பிடிக்கும் கடைகள், பஞ்சர் ஒட்டும் கடைகளையும் அனுமதிக்க வேண்டிய பட்டியலில் சேர்க்கலாம்.
அதேபோல, அரசுக்கு வருவாய் அளிக்கக் கூடிய பதிவுத் துறை அலுவலகங்களும், பத்திரப் பதிவு சார்ந்த சேவைகளும் அனுமதிக்கப்படுவதில் எந்தத் தவறையும் காண முடியாது; நெரிசலுக்குரிய இடங்கள் அல்ல அவை.
அரசு தன்னுடைய ஊரடங்கு விதிகளை மறுபரிசீலிப்பது அவசியம் என பெரும்பாலான பொதுமக்கள் கூறி உள்ளனர்.