மக்களின் உயிரை காக்கும் ரெம்டெசிவிர் மருந்து மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கியும், அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: உலகளாவிய அளவிலும், குறிப்பாக இந்திய ஒன்றியத்திலும் கொரோனா இரண்டாவது அலை ஏற்படுத்தி இருக்கும் நெருக்கடிவளையத்தில் இருந்து தமிழகமும் தப்பிக்கவில்லை.
நாள்தோறும் அதிகரித்து வரும் நோய்த்தொற்று எண்ணிக்கையையும், இறப்புகளையும் முழுமையாக கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டு உள்ளன. மக்களுக்கான இந்த அரசு இரவு பகல் பாராது செயல்பட்டு வருகிறது.
ஏழை மக்கள் கூட தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தில் ஏற்படும் பாதிப்பை தாண்டி, அரசின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு ஊரடங்கு எனும் கசப்பு மருந்தை விழுங்கி மக்களின் உயிரை காப்பதற்கு ஒத்துழைப்பு அளிக்கிறார்கள்.
அதேநேரத்தில், சில சமூக விரோதிகள் ரெம்டெசிவிர் மருந்துகளை பதுக்கி கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள் அதேபோல், ஆக்சிஜன் சிலிண்டர்களை மிக அதிக விலைக்கு ஆங்காங்கே சிலர் விற்பது தொடர்பான குற்றச்சாட்டுகளும் வருகின்றன.
பேரிடர் காலத்தில் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது மிகக்கடுமையான குற்றமாகும்.தடுப்பூசி இறக்குமதி, ரெம்டெசிவிர் மருந்து விநியோகம், ஆக்சிஜன் உற்பத்தி, படுக்கைகள் எண்ணிக்கை அதிகரித்தல், கட்டுப்பாட்டு மையங்கள் வாயிலாக உடனுக்குடன் சிகிச்சைக்கான ஏற்பாடு என தமிழக அரசு தொய்வின்றி தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
ரெம்டெசிவிர் மருந்துகளை பதுக்குவோர் மீதும் ஆக்சிஜன் சிலிண்டர்களின் விலையை உயர்த்தி விற்பனை செய்வோர் மீதும் குண்டர்சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.