திருச்சி: “விடியலுக்கான முழக்கம்”” – எனும் பெயரிலான திமுக, -வின் சிறப்புப் பொதுக்கூட்டம், திருச்சியை அடுத்த சிறுகனூரில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
90 அடி உயரக் கொடிக்கம்பத்தில் திமுக, தலைவர் மு.க. ஸ்டாலின் கொடியேற்றி வைத்து பொதுக்கூட்ட நிகழ்வுகளை தொடங்கி வைத்தார்.
திருச்சியை அடுத்த சிறுகனூரில் தேர்வு செய்யப்பட்டுள்ள 750 ஏக்கர் நிலத்தில் பிரமாண்ட பொதுக்கூட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, தீரர்கள் கோட்டம் விழாக் கோலம் பூண்டுள்ளது. பேரவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக திமுக, -வின் 11ஆவது மாநில மாநாடு திருச்சியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக, திருச்சி – சென்னை புறவழிச்சாலையில் சிறுகனூர் அருகே சுமார் 750 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு இரண்டு மாதங்களுக்கு முன்பே பூஜையுடன் பணிகள் தொடங்கின.
தேர்தல் ஆணைய அறிவிப்பால் மாநாட்டு நிகழ்ச்சியை ரத்து செய்து, பொதுக்கூட்டமாக அறிவித்தது திமுக தலைமை.
மாநாட்டுக்காக ஏற்பாடு செய்த இடத்தில் பொதுக்கூட்ட ஏற்பாடுகளை முதன்மைச் செயலர் கே.என். நேரு முன்னின்று செயல்படுத்தி வந்தார்.
3 மேடைகள், 100 அடி கொடிக்கம்பம், 300 அடி எல்இடி. திரை, 350 ஏக்கரில் பார்வையாளர்கள் அமர இடம், 400 ஏக்கரில் வாகனங்கள் நிறுத்தும் இடம், 25 உணவுக் கூடங்கள், ஆங்காங்கே குடிநீர்த் தொட்டிகளுடன் 5 லட்சம் கொள்ளளவுக் கொண்ட குடிநீர், கழிப்பறை என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
2 லட்சம் பேர்கள் அமர்ந்து பொதுக்கூட்ட நிகழ்வுகளைக் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்குப் பிற்பகல் வருகை தந்த மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் நிர்வாகிகள் வாகனங்கள் மூலம் சிறுகனூருக்கு ஊர்வலமாக அணிவகுத்து சென்றனர்.
பொதுக்கூட்டத்திடலுக்கு வந்த ஸ்டாலினுக்கு மேள, தாளங்கள் முழங்கவும், அதிர்வேட்டுகள் முழங்கவும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர், பொதுக்கூட்ட மைதானம் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டிருந்த 90 அடி உயரக் கொடிக்கம்பத்தில் கட்சிக் கொடியை மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், கட்சியின் பொருளாளர் டி.ஆர். பாலு, பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மைச் செயலர் கே.என். நேரு, எம்பி-க்கள் கனிமொழி, ஆ. ராசா, திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏ., வுமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன் , திருவெறும்பூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் கருணாநிதி, திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய நிர்வாகி திலகராஜன், துவாக்குடி நகர செயலாளர் காயாம்பு, அவை தலைவர் ஸ்டீபன்ராஜ் , பொருளாளர் ஜெய்னுதீன் ஆலீம், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கயல்விழி, துணை அமைப்பாளர் ஞானதீபம், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் சாந்தகுமாரி, பொன்மலை பகுதி செயலாளர் தர்மராஜ் , காட்டூர் பகுதி செயலாளர் நீலமேகம், மாவட்ட பிரதிநிதி தங்கவேல், கூத்தப்பார் பேரூர் செயலாளர் செல்வராஜ் மற்றும் கட்சியின் முன்னோடிகள் பலர் பங்கேற்றுள்ளனர். இரவு 8 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இக்கூட்டத்தில் இரவு 7 மணிக்கு திமுக-வின் 10ஆண்டுக்கான தொலைநோக்கு திட்ட லட்சிய பிரகடனத்தை வெளியிட்டு மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார்.