நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டது.
நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டது.
நடிகர் விஜயின் ரசிகர் மன்றமான விஜய் மக்கள் இயக்கம், தேர்தல் ஆணையத்தில், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜயை, அவருடைய ரசிகர்கள் கடந்த சில ஆண்டுகளாக அரசியலுக்கு வரவேண்டும் என்று அவருக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.
முதலில் விஜய் ரசிகர்கள் நற்பணி மன்றங்களாக இருந்த ரசிகர் மன்றங்கள் விஜய் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டது. விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகத்தை நடிகர் விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், கவனித்து வந்தார். அவர் அவ்வப்போது பல மாவட்டங்களுக்கு சென்று விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வந்தார்.
இந்த சூழ்நிலையில்தான், விஜயின் மக்கள் இயக்கம் தலைமை தேர்தல் ஆணையத்தில், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக பதிவு செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
அரசியல் கட்சியாக பதிவு செய்யும் விண்ணப்பத்தில், விஜயின் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் கட்சியின் தலைவராக பத்மநாபன், பொதுச் செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளராக விஜயின் தாயார் ஷோபா என விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ளதைப் பற்றி விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.