திருச்சி காவேரி ஆற்றில் முதலைகள் நடமாட்டம். இறைச்சி கழிவுகளை ஆற்றில் கொட்டாதீர்கள் வனத்துறையினர் எச்சரிக்கை .
திருச்சி காவிரியாற்றில்
முதலைகள் நடமாட்டம்.
வனத்துறையினர் கண்காணிப்பு.
திருச்சி காவிரி ஆற்றில் மக்கள் புழக்கம் அதிமுள்ள பகுதியில் இரு முதலைகள் நடமாட்டம் இருப்பதாகவும் அவற்றை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருச்சி சிந்தாமணி காவிரிப்பாலம் பகுதியில், ஆற்றுக்குள் உள்ள மணல் திட்டுகளில் இரு முதலைகள் படுத்திருப்பதை சிலர் கண்டனர். இந்த தகவல் பரவியதையடுத்து பாலத்தில் சென்றவர்கள் அவற்றை வேடிக்கை பார்க்க குவிந்தனர். இது குறித்து வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டன.
இதற்கிடையில் காவிரி பாலத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகமானதால் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. இதையடுத்து, கோட்டை காவல் நிலைய போலீசார் அங்கு வந்து போக்குவரத்தை ஒழுங்கு செய்தனர்.இந்த நிலையில் வனத்துறையினர் அங்கு வந்து பார்த்த பொழுது முதலை நடமாட்டம்இருப்பது தெரிய வந்தது.ஆனால் இரவு நேரமானதால்
முதலையை பிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் திருச்சி வனத்துறை ரேஞ்சர் கோபிநாத் தலைமையிலான வனத்துறையினர் ட்ரோன் மூலமாக காவிரி பாலம் பகுதியில் முதலைகள் நடமாட்டத்தை கண்காணித்தனர் அப்போது அவர்களின் கண்களுக்கு முதலை தென்படவில்லை இதற்கு இடையே இரவு மேல சிந்தாமணி அண்ணா சிலை உள்ளிட்ட படித்துறை பகுதிகளில் ஒலிபெருக்கி மூலமாக காவிரி ஆற்றில் முதலைகள் நடமாட்டம் உள்ளதால் யாரும் ஆற்றுக்குள் இறங்கி குளிக்கவோ துணி துவைக்கவும் வேண்டாம். இறைச்சிக் கழிவுகளை ஆற்றுக்குள் கொட்டாதீர்கள் என எச்சரிக்கை விடுத்தனர்.
பின்னர் வனத்துறையினர் கூறும் போது,
முதலை தென்படவில்லை. ஆகவே அது அங்கிருந்து இடம் பெயர்ந்து சென்றிருக்கலாம் என கருதுகிறோம்.
யாராவது முதலையை பார்த்தால் உடனே தகவல் தெரிவிக்கவும். கரைக்கு வந்தால் உடனடியாக பிடித்து மாற்று இடத்தில் விட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.