திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கு வழிநெடுக்கிலும் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் படத்துடன் பிளக்ஸ் இருந்ததால் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அமைச்சர் கே.என்.நேரு அதிகாரிகளிடம் கடும் கோபம்.
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் சார்பில் 19 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடகள போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது .
விளையாட்டுப் போட்டி அண்ணா விளையாட்டு அரங்கம் சாலை வழியெங்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டு இருந்ததால், அமைச்சர் நேரு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கடிந்துக் கொண்டார்.
இந்த விவகாரத்தால் போட்டிகள் சிறிது நேரம் நிறுத்தப்பட்டன.
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாநில அளவிலான தடகளப் போட்டிகள் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு பல தரப்பினரிடம் இருந்து நிதி வசூல் செய்து போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் படம் கொண்ட பிளக்ஸ் போர்டுகள் அண்ணா விளையாட்டு அரங்கின் சாலையில் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன.
விளையாட்டு அரங்கிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மாவட்ட விளையாட்டு அதிகாரிகளுக்கு டோஸ் விட்டார். அதிமுக முன்னாள் அமைச்சரின் பிளக்ஸ் போர்டுகளை வைத்தது யார், அமைச்சரான என் படம் வைத்து ஒரு பிளக்ஸ் கூட இல்லை முன்னாள் அதிமுக அமைச்சருக்கு யார் பிளக்ஸ் வைத்தது என கோபமாக கேட்டுள்ளார். இதற்கு பதில் அளிக்க முடியாமல் அதிகாரிகள் விழிபிதுங்கியுள்ளனர்.
இந்த விவகாரத்தால், சிறிது நேரம் போட்டி நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, உடனடியாக அந்த பிளக்ஸ் போர்டுகள் அகற்றப்பட்டன. சில இடங்களில் சாலையில் தலைக்குப்புற கவிழ்த்து வைக்கப்பட்டன. பிளக்ஸ் போர்டுகள் சில இடங்களில் ஒளித்து வைக்கப்பட்டன. பின்னர் போட்டி தொடர்ந்து நடைபெற்றது.
திமுக ஆட்சி காலத்தில் திமுக அமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சருக்கு பிளக்ஸ் போர்டு வைத்து விவகாரம் திருச்சி மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.