என்கவுண்டரில் கொல்லப்பட்ட கொம்பன் ஜெகன் பிரதர்ஸ் என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் திருச்சி எஸ் பி க்கு கொலை மிரட்டல்.
திருச்சி மாவட்டம் பனையகுறிச்சியை சேர்ந்த கொம்பன் என்கிற ஜெகன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
இன்ஸ்டாகிராமில் இளைஞர்களை தவறாக வழி நடத்தும் வகையில் வீடியோ வெளியிட்டு வந்ததாகவும் அவர் மீது புகார் இருந்தது. அவர் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில் கொம்பன் டீம், கொம்பன் பிரதர்ஸ் என்கிற பெயரில் சிலர் இன்ஸ்டாகிராமில் கணக்கு ஒன்றை தொடங்கி அதில் கொம்பன் தொடர்பான வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.
அந்த வகையில் அதில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்களில் சில போலீசாரை மிரட்டும் விதமாக உள்ளது. குறிப்பாக ரெட் அலர்ட் என்றும், சம்பவங்கள் தொடரும், காத்திருடா போலீஸ் எனவும் ஒரு வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்றொரு வீடியோவில் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் புகைப்படத்தை வைத்துக்கொண்டு தலைகள் சிதறும் என எழுதி மிரட்டல் விடுக்கும் வகையில் பாடல்களையும் அதில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
எஸ் பி வருண்குமார் உள்ளிட்ட போலீசாரை மிரட்டும் வகையில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் அந்த இன்ஸ்டாகிராம் கணக்கை பயன்படுத்துவது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.