கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து பாரம்பரிய முடி திருத்தும் தொழிலாளர்களை பாதுகாக்க தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் முதல்வருக்கு மனு.
கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து பாரம்பரிய முடி திருத்தும் தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும்
தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் முதல்வருக்கு மனு.
தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்க திருச்சி மாநகர் மாவட்ட சங்க செயலாளார் தர்மலிங்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
முடி திருத்தும் தொழிலை சீரழிக்கிற வகையில் அவர்களின் வாழ்வாதாரத்தை கெடுக்கும் வகையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்டணத்தை குறைத்து தொழில் செய்து வருகின்றன.
இது பாரம்பரிய முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோன்று தமிழகத்தில் பல்வேறு கிராமங்களில் முடித்திருக்கும் தொழிலாளர்களுக்கு ஜாதி ரீதியிலான வன்கொடுமைகள் நடைபெற்று வருகிறது. இதை தவிர்க்க ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துகளிலும் அரசின் சார்பில் முடி திருத்தும் நிலையங்களை உருவாக்க வேண்டும்.
எங்கள் சமூகத்தினர் பாரம்பரியமாக சித்த மருத்துவத்தில் ஈடுபட்டு வருவதால் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர் சமூக மக்களுக்கு முன்னுரிமை வழங்கி வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும்.
நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 40க்கு 40 இடங்களிலும் தங்களது கூட்டணி வெற்றிவாகை சூடியதற்கு சங்கம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த மருத்துவர் சமூகம் எப்போதும் திராவிட இயக்கத்துக்கு துணையாக இருந்து வருகிறது என்பதை தாங்கள் அறிவீர்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.