திருவானைக்காவலில் டாஸ்மாக் கடையில் பணம் கேட்டு கொத்தனார் மண்டையை பீர் பாட்டிலால் உடைத்த 3 ரவுடிகள் கைது.
திருவானைக்காவலில் டாஸ்மாக் கடையில் மது வாங்க வந்த கொத்தனாரின் மண்டையை உடைத்து பணம், செல்போனை கொள்ளையடித்துச் சென்ற மூன்று ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம், கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
திருச்சி திருவானைக்காவல் நடு கொண்டையம்பேட்டை கரிகாலன் தெருவை சேர்ந்தவர் நல்லேந்திரன். இவரது மகன் மாரிமுத்து. கொத்தனார் . இவர் நேற்று பணி முடித்ததும் திருவானைக்காவல் ஒய் ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது வாங்க சென்றார் .அப்போது அங்கு நின்றிருந்த 3 வாலிபர்கள் இவரிடம் மது வாங்க பணம் கேட்டு தகராறு செய்தனர் .ஒரு கட்டத்தில் கத்தி முனையில் மாரிமுத்துவை மிரட்டினர் .அப்போது மாரிமுத்து தன்னிடம் பணம் இல்லை எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மூன்று வாலிபர்களும் பீர் பாட்டிலால் மாரிமுத்துவின் மண்டையை உடைத்தனர் .
பின்னர் கத்தி முனையில் அவரிடம் இருந்த ரூ5500 பணம், செல்போன் ஆகியவற்றை பிடுங்கி விட்டு விரட்டி விட்டனர். மண்டை உடைந்து ரத்தம் பீறிட்ட நிலையில் மாரிமுத்து திருவரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். பின்னர் அவர் கொடுத்த புகாரின் பேரில் திருவரங்கம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவானந்தம் வழக்குப்பதிந்து அந்த மூன்று வாலிபர்களையும் கைது செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர்கள் திருவானைக்காவல் கொண்டையம்பேட்டையைச் சேர்ந்த குருமூர்த்தி (வயது 23), சக்திவேல் (வயது 18), பரணிகுமார் (வயது 21) என்பது தெரியவந்தது. இவர்கள் மூன்று பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து செல்போன், பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் குருமூர்த்தி மீது திருவரங்கம், கோட்டை, பொன்மலை காவல் நிலையங்களில் 6 வழக்குகளும், சக்திவேல் மீது திருவரங்கத்தில் ஒரு வழக்கும், பரணி குமார் மீது திருவரங்கம், லால்குடியில் 3 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.