திருச்சி கொள்ளிடம் ஆற்றில் இன்று 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு. கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை.
திருச்சி கொள்ளிடம் ஆற்றில் இன்று
2 ஆயிரம் கன அடி
தண்ணீர் திறப்பு.
கரையோர மக்களுக்கு
வெள்ள எச்சரிக்கை.
திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் இன்று இரவு அல்லது நாளை காலை 2000 கன அடி தண்ணீர் திறக்கப்படவுள்ளதால், கொள்ளிடம் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி முக்கொம்பு மேலணைக்கு மேட்டூர் அணையிலிருந்து, 2100 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதேவேளையில், கரூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகள் மற்றும் காவிரி கரையோரங்களில் கன மழை பெய்து வருகிறது.
இதனால், மாயனூர் கதவணை மற்றும் முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
அதையடுத்து, திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில், 2000 கனஅடி தண்ணீர் இன்று இரவு அல்லது நாளை காலை திறக்கப்படவுள்ளதாக பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கொம்பு பகுதியிலும், திருப்பராய்த்துறை பகுதியிலும் புல்டோசர் மூலம் மண்ணால் தடுப்பு அமைத்து தண்ணீரை கொள்ளிடத்தில் திருப்பி விட அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வந்தனர். ஆனால் காவிரியில் அதிகளவு தண்ணீர் வந்ததால் அடைக்கப்பட்ட தற்காலிக தடுப்பு உடைந்து அனைத்து தண்ணீரும் காவிரியில் சென்று கொண்டிருக்கிறது தொடர்ந்து புல்டோசர் எந்திரங்கள் மூலம் மணலால் முக்கொம்பு பகுதியில் தடுப்பு அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது .
இந்த பணி இன்று மாலை முடிவடைந்த உடன் இன்று இரவு அல்லது நாளை காலை முக்கொம்பில் 2000 கனஅடி தண்ணீர் திருப்பி விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
அதன் காரணமாக, கொள்ளிடம் ஆற்றில் பொதுமக்கள் குளிக்க செல்ல வேண்டாம். பாலங்களில் நின்று செல்ஃபி எடுக்க வேண்டாம்.
மேலும், திருச்சி திருவானைக்காவல் கொள்ளிடம் ஆற்றில் சலவைத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக துணிகளை வைக்கவும்,
கரையோரத்தில் வசிக்கும் மக்கள் தங்களது கால்நடைகளை ஆற்றில் மேய்ச்சலுக்கு விட வேண்டாம் எனவும், ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.