1)
எடமலைப்பட்டி புதூரில் பெண்ணிடம் 6 பவுன் நகை பறித்த மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஐஸ்வர்யா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் நித்தியா (வயது 40) இவர் நேற்று இரவு வெளியே சென்று விட்டு தனது மகனுடன் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம ஆசாமிகள் நித்யா வந்த இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்து கீழே தள்ளி விட்டனர். இதில் நிலை தடுமாறி தாயும், மகனும் கீழே விழுந்தனர். இதையடுத்து உடனே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் நித்தியா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலிச் சங்கிலி பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி உமா தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து, தாலிச் சங்கிலி பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
2.
திருச்சியில்
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது.
திருச்சி சின்னக்கடை வீதி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 59) சம்பவத்தன்று தேரடி வீதியில் நின்று கொண்டிருந்த இவருடைய சகோதரரை கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ.500ஐ ஒருவர் பறித்து சென்று விட்டார். இது குறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பணத்தை பறித்து சென்றது அல்லிமால் தெருவை சேர்ந்த சங்கர் (வயது 47) என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்
3)
திருச்சியில்
செல்போன் திருடிய 2 பேர் கைது.
திருச்சி மணிகண்டம் தீன தயாளன் நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 36).சம்பவத்தன்று இவர் திருச்சி பைபாஸ் சாலையில் செட்டிப்பட்டி பகுதியில் கோரையாறு பாலம் அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்க சென்றார். அப்போது மோட்டார் சைக்கிள் வந்த 3 பேர் விஜயகுமாரின் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த செல்போனை திருடிக் கொண்டு சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் விஜயகுமாரின் செல்போனை திருடியது ஏர்போர்ட் காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த தனுஷ் (வயது 18) திருச்சி அய்யம்பட்டி சேர்ந்த புகழரசன் (வயது 19) மற்றும் கேகே நகர் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தனுஷ், புகழரசன் ஆகியோரை கைது செய்த போலீசார், சதீஸ்வரனை தேடி வருகிறார்கள்.