திருச்சியில் போதை ஊசி, மாத்திரைகளுடன் வாலிபர் கைது.
திருச்சி மாநகரில் போதைப் பொருள்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கஞ்சா விற்பனை ஒருபுறம் இருக்க, போதை ஊசி, மாத்திரைகள் விற்பனை மாநகரில் அமோகமாக உள்ளது. அரியமங்கலம் பகுதியில் போதை ஊசி, மாத்திரைகள் அதிக அளவில் விற்கப்படுகிறது. அங்கிருந்து வாங்கி வந்து மாநகரில் பல இடங்களில் வைத்து இளைஞர்கள் பயன்படுத்துகின்றனர் .இதனால் அவர்களது வாழ்வாதாரம் சீரழிந்து விடுகிறது.
இந்நிலையில் திருச்சி பழைய குட்ஷெட் ரோடு ரயில்வே மைதானம் பகுதியில் போதை ஊசி, மாத்திரைகள் பயன்படுத்தப்படுவதாக கோட்டை போலீசாருக்கு தகவல் வந்தது .இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போதை ஊசி மாத்திரைகளுடன் இருந்த சதாம் உசேன் என்ற வாலிபரை கைது செய்தனர். அரியமங்கலத்தைச் சேர்ந்த ஒரு வியாபாரியிடம் அங்கு சென்று வாங்கி வந்து பயன்படுத்தியது தெரியவந்தது. அவரிடம் இருந்து போதை ஊசி மற்றும் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் இளைஞர்களுக்கு போதை ஊசி மற்றும் மாத்திரைகள் சப்ளை செய்து வந்த அரியமங்கலம் வியாபாரியை விரைவில் பிடித்து விடுவோம் என கோட்டை போலீசார் கூறியுள்ளனர்.