Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அய்யாக்கண்ணு தலைமையில் மனு அளிக்க வந்த நரிக்குறவர்களிடம் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் உறுதி.

0

விவசாய நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டி
வருவாய் துறை அமைச்சரிடம் அய்யாக்கண்ணு தலைமையில் நரிக்குறவர்கள் கோரிக்கை.

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவரும், சீர் மரபினர் அமைப்பின் பொறுப்பாளருமான அய்யாக்கண்ணு தலைமையில் நரிக்குறவர் நல சங்க தலைவர் கணேசன், செயலாளர் நம்பியார், பொருளாளர் பாபு,சீட் மரவினர் அமைப்புச் சென்ற காசிமாயதேவர், தெ.ந.இ.வி.ச. செய்தி தொடர்பாளர் பிரேம் குமார் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் இன்று திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ். ராமச்சந்திரன் சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

பெரம்பலூர் மாவட்டம் எறையூர் கிராமத்தில் 1976 ம் ஆண்டு முதல் சுமார் 350 ஏக்கர் நிலத்தை நாடோடிகளாக அலைந்த 150 நரிக்குறவர்களுக்கு வீட்டுமனையும் 350 ஏக்கர் சாகுபடி நிலமும் அப்போதைய திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட கலெக்டர் வழங்கினார். கடந்த 46 ஆண்டுகளாக அந்த நிலத்தை உழுது நாங்கள் சாகுபடி செய்து பிழைத்து வந்தோம்.

இந்த நிலையில் நில அளவை நிலவரித் திட்டம் கூடுதல் இயக்குனர் கடந்த 1984 களில் பெரம்பலூர் வருகை தந்த போது நீங்கள் நிலம் அற்றவர்கள் என்று அத்தாட்சி கிடைத்த பிறகு உங்களுக்கு பட்டா வழங்குவதாக உறுதி தெரிவித்தார்கள். ஆனால் 25 ஆண்டுகள் மேலாகியும் இதுவரை பட்டா வழங்கவில்லை. பலமுறை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டும் உயர்நீதிமன்றமும், எங்களை மேற்படி நிலத்தில் உழுவதை யாரும் தடுக்க கூடாது என்று தடை உத்தரவு வழங்கியும் பெரம்பலூர் மாவட்ட வருவாய்த்துறை எங்களை தடுக்கிறது.

தெருத் தெருவாக அலைந்து நாய்க்கடி வாங்கி ஊசிமணி பாசி விற்பனை செய்து அலைந்த எங்களை நிரந்தரமாக பெரம்பலூர் எறையூரில் தங்கி தொடர்ந்து வாழவும், எங்கள் குழந்தைகளை படிக்க வைப்பதற்கும், சாகுபடி செய்யும் நிலத்திற்கு பட்டா வழங்கியும் சீர் மரபினர் பழங்குடி மக்களாகிய எங்களை காப்பாற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம் என அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசல் அருகே தரையில் அமர்ந்து இருந்த நரிக்குறவர்களிடம் சென்று வருவாய் துறை அமைச்சர் உடனடியாக உரிய விசாரணைகள் முடித்த உடன் அனைவருக்கும் பட்டா வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார்.

 

Leave A Reply

Your email address will not be published.