Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பஞ்சப்பூர் பஸ் நிலையப் பணிகள் அடுத்த ஆண்டுக்குள் நிறைவடையும், அமைச்சர் கே.என்.நேரு பேட்டி.

0

 

பஞ்சப்பூர் பஸ் நிலைய பணிகள் அடுத்த ஆண்டுக்குள் நிறைவடையும்
அமைச்சர் கே என். நேரு உறுதி.

திருச்சி
மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் இன்று நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என். நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலைய திட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ.390 கோடி நிதி ஒதுக்கி உள்ளார்.
30 ஏக்கர் பரப்பளவில் டெர்மினல் மற்றும் பஸ் நிலைய பணிகள் நடைபெற உள்ளது. இங்கு 44 பஸ்கள் நிற்கும் அளவுக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் ஒரே நேரத்தில் பத்தாயிரம் பேர் இந்த பஸ் நிலையத்துக்குள் வந்து செல்ல வசதி செய்யப்படும்.

தெற்கு டெர்மினல் பகுதியில் மொத்த லோடு வாகனங்களும் நிற்கும். .அது மட்டும் இல்லாமல் 28 ஏக்கர் பரப்பளவில் மொத்த மற்றும் சில்லறை மார்க்கெட் அமைய இருக்கிறது.
மேலும் சாலைகளை அகலப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்ய மேம்பாலம் அமைக்கப்படும்.

தற்போது பஞ்சப்பூர் பைபாஸ் சாலைக்கு தேவையான நிலங்களை நெடுஞ்சாலை துறையினர் கையகப்படுத்தி விட்டார்கள். ஆகவே அந்தப் பணிகளும் நடைபெற இருக்கிறது. மேலும் மாநகராட்சிக்கு வருவாயை பெருக்கும் வகையில் பெரிய மால் ஒன்றும், அதன் பின்னால் வர்த்தக மையம் ஒன்றும் அமைக்கப்பட இருக்கிறது.

திருச்சி மாநகராட்சி பொருத்தமட்டில் பாதாள சாக்கடை பணிகள் சற்று தாமதமாக நடக்கிறது. பணிகளை விரைவுப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்னும் 15 நாட்களுக்குள் திருச்சி மாநகரில் 75 சதவீத சாலைகள் போடப்படும். மேலும் 7 பெரிய சாலைகள் 7,8 நாட்களில் போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சாலைப் பணிகளுக்கான டெண்டர் அனைத்தும் விடப்பட்டு விட்டது.

பெரிய அளவில் தூய்மை பணியாளர்களை வைத்து தூய்மை பணிகளை மேற்கொள்வதை காட்டிலும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி குப்பைகளை தரம் பிரித்து மக்களே வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் கலைஞர் பிறந்த நாளில் மெகா தூய்மை பணி தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து தொடங்கப்பட்டது இதன் மூலம் இதுவரை 7,200 டன் குப்பை சேகரிக்கப்பட்டுள்ளது.

பஞ்சப்பூர் பஸ் நிலைய அமைவிடத்தில் மூன்றடி ஆழத்துக்கு மண் நிரப்பும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன மற்ற பணிகள் டெண்டர் கட்டத்துக்கு வந்திருக்கிறது இந்த டெண்டர் பணிகள் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் நிறைவடையும் அதன் பின்னர் பணிகள் தொடங்கப்பட்டு ஒன்றேகால் வருடத்தில் பஸ் நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

பஞ்சப்பூர் புதிய பஸ் நிலையத்துக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கையெழுத்திட்டு 390 கோடிக்கு அரசாணை வெளியிட்டு இருக்கும் நிலையில் பஸ் நிலையம் வராது என்று சொல்பவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை.
மாநகராட்சி பகுதிகளில் உள்ள குப்பை கிடங்குகளில் பயோ மைனிங் முறை நடைமுறையில் உள்ளது. சென்னை பெருங்குளத்தூரில் உள்ள குப்பை கிடங்கில் உள்ள குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டு 400 ஏக்கர் நிலத்தை பூங்காவாக மாற்ற திட்டமிட்டுள்ளோம் .அது மட்டுமல்லாமல் சென்னையில் மரக்கழிகளில இருந்து எரிபொருள் தயாரிப்பது, காய்கறி கழிவிலிருந்து கேஸ் எடுத்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவது நடைமுறையில் உள்ளது. இந்த திட்டங்கள் மற்ற மாநகராட்சிகளிலும் நடைமுறைக்கு கொண்டுவரப்படும்.

பாதாள சாக்கடை இல்லாத பேரூராட்சி பகுதிகளில் கழிவுகளை காய வைத்து உரமாக்கும் திட்டங்களும் செயல்பாட்டில் உள்ளன. ஐம்பதாயிரம் மக்கள் தொகைக்கு மேல் இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் மீண்டும் மழை வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 938 கோடி நிதி ஒதுக்கி அந்த பணிகளை தினமும் பார்வையிட்டு வருகிறார்.

மத்திய மந்திரியாக இருந்த பொன் ராதாகிருஷ்ணன் ஊழல் குறித்து பேசக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.