Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்கள் சாதாரண கூட்டத்தில் நடைபெற்ற வாக்குவாதம் முழு விபரம்,

0

 

பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் சரமாரி குற்றச்சாட்டு.

திருச்சி மாநகராட்சியின் சாதாரண கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் 3.84 கோடியில் சமுதாய கழிப்பிடங்கள் அமைப்பது, போக்குவரத்து நெரிசலை குறைக்க பஞ்சப்பூர் முதல் கரூர் பைபாஸ் வரையிலான உய்யக்கொண்டான் கால்வாய் கிழக்கு கரையில் 12 கிலோ மீட்டர் நீளத்திற்கு 40 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைப்பது, கொட்டப்பட்டு முதல் வெங்கடேஸ்வரா நகர் வரையில் மழைநீர் வடிகால் மற்றும் சிறு பாலம் 92 லட்சம் மதிப்பில் கட்டுவது, கம்பரசம்பேட்டை தலைமை நீரேற்று நிலையத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்வது, மாநகராட்சி தூய்மை பணிக்கு இரண்டு புதிய ஜேசிபி இயந்திரங்கள் வாங்குவது, 30 லட்சம் மதிப்பீட்டில் சிறிய ரக சாலை சுத்தம் செய்யும் வாகனம் வாங்குவது, துப்புரவு ஆய்வாளர் பணியிடத்திற்கு விதிகள் திருத்தம் செய்து அரசுக்கு அனுப்பி வைப்பது, மாநகராட்சி சாலைகளில் வளைவுகளில் 120 வாட்ஸ் எல்இடி மின் விளக்குகளுக்கு பதிலாக மாநகரை அழகுபடுத்தும் நோக்கில் 150 வாட்ஸ் ஹெரிடேஜ் எல்இடி மின்விளக்குகள் பொருத்துவது உள்ளிட்ட 40 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் வைத்திலிங்கம்,
மண்டல தலைவர்கள் மதிவாணன், விஜயலக்ஷ்மி கண்ணன், துர்கா தேவி, உள்ளிட்ட கவுன்சிலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:-

லீலா வேலு (திமுக) – எனது 49 வது வார்டுக்கு உட்பட்ட ஹனிபா காலனி பகுதியில் ஒரு மாதத்திற்கு மேலாக பாதாளக் சக்கடைக்கு தோண்டப்பட்ட குழியில் வெள்ளம் வழிந்து ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.

முத்துச்செல்வம்
(திமுக) – எனது வார்டிலும் பாதாள சாக்கடை பணிகள் சீராக நடக்கவில்லை.
(எல் & டி) பெரிய கம்பனி என்று சொல்கிறார்கள். ஒரு மாத காலத்திற்குள் மழை காலம் வந்து விடும். அப்போது மக்களுக்கு பெரும் சிரமம் ஏற்படும். எனவே இந்த காண்டிராக்ட்டி
ரத்து செய்ய வேண்டும்.

ராமதாஸ்(திமுக) – என்னுடைய கல்யாணம் சுந்தரம் நகரில் மூன்று வருடங்களாக பாதாள சாக்கடைப் பணிகள் முடிவடையாமல் இருக்கிறது.

மேயர் அன்பழகன் – பாதாள சாக்கடை பணிகளை விரைவுபடுத்த எல்அண்ட்டி நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பணிகள் தொய்வாக நடக்கின்ற காரணத்தால் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய வேண்டிய ரூ.15 கோடி தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பாதாளச் சாக்கடை மூன்றாவது கட்டப் பணிகளை வருகிற டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க அந்த நிறுவனத்துக்கு அறிவுறுத்தி உள்ளோம்.உடனடியாக கான்டிராக்ட் கேன்சல் செய்தால் ஒதுக்கப்பட்ட நிதி வீணாகிவிடும்.

சுஜாதா(காங்கிரஸ்) – நான் முதல் கூட்டத்திலேயே எனது வார்டில் இருக்கக்கூடிய ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வாரம் ஒரு முறையாவது டாக்டர்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

மேயர் அன்பழகன் – தற்போது ஒரு டாக்டரே நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. விரைவில் மேலும் 4 டாக்டர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல் 36 புதிய சுகாதார நிலையங்களை திறக்க போகின்றோம். அதற்கு சுகாதாரத் துறை மூலமாக டாக்டர், நர்சிங், உதவியாளர் நியமிக்கப்படுவார்கள்.

கவிதா செல்வம்(திமுக) – எனது வார்டுக்கு உட்பட்ட ராக்போர்ட் நகர் பகுதியில் மக்களுக்கு பாதாள சாக்கடை மற்றும் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பைப் லைன் போட முடியவில்லை. அங்கு இருக்கக்கூடிய 200 சதுர அடி நிலம் ராணுவத்துக்கு சொந்தமாக இருக்கிறது. அதனை கையகப்படுத்தி அடிப்படை வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேயர் அன்பழகன் – அரிஸ்டோ மேம்பாலத்துக்கு நிலம் கையகப்படுத்துவது போல இதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரபாகரன்(விசிக) – இரட்டை வாய்க்காலை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதே கருத்தை கவுன்சிலர் மதிவாணனும் வலியுறுத்தினார்.

பைஸ் அகமது(மமக) – குடிநீர் குழாய்கள், கழிவுநீர் குழாய்கள் பாதிக்கப்படும் பொழுது ஒரே மட்டத்தில் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டால், அது குடிநீருடன் கலக்கும் அபாயம் உள்ளது. இது குறித்து பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை.எனவே இதனை மாநகராட்சி கவனத்தில் கொள்ள வேண்டும்.

செந்தில்நாதன் (அ.ம.மு.க):
திருச்சி மாநகராட்சி வரவு செலவு திட்டத்தை இணையதளத்தில் இதுவரை பதிவு செய்யவில்லை. அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் வரவுசெலவுத் திட்டத்தை மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடவேண்டும்.இதேபோல் எனது 47 வார்டில் குப்பை அள்ள ஒருவர் கூட இல்லை.

சுரேஷ்குமார் (சி பி ஐ ):-
மாநகராட்சி கூட்டத்தில் பிரதான அரசியல் கட்சி கவுன்சிலர்களுக்கு பேசுவதற்கு சம வாய்ப்பு வழங்க வேண்டும்.நீங்களே பேசிக் கொண்டிருந்தால் நாங்கள் எங்கள் வார்டு மக்களின் பிரச்சினைகளை எப்படி மாமன்றத்தில் எடுத்துக் கூற முடியும்?.நாய் கருத்தடை மையங்களில் அரசு கால்நடை மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது
தொடர்ந்து கவுன்சிலர்கள் தங்கள் வார்டில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி பேசினார். இதற்கு மேயர், கமிஷனர், மாநகராட்சி அதிகாரிகள் பதில் அளித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.