Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டத்தில் 30ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு.

0

 

கரூர் மாவட்டக் கல்வித்துறையின்
தொடர் பழிவாங்கும் நடவடிக்கைகளைக் கண்டித்து
30-ந் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம் திருச்சியில் ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் மு.மணிமேகலை தலைமை வகித்தார். திருச்சி மாவட்டச் செயலர் ஆரோக்கியராஜ் வரவேற்புரையாற்றினார். மாநிலப் பொருளாளர் ஜீ.மத்தேயு, துணைப் பொதுச்செயலாளர் தா.கணேசன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

தொடர்ந்து மாநிலச் செயற்குழு முடிவுகள் குறித்து பொதுச்செயலாளர் ச.மயில் கூறியதாவது
கரூர் மாவட்டத்தில் கல்வித்துறை அலுவர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வின் போது செய்த தவறுக்காக கடவூர் ஒன்றியத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் குளித்தலை மாவட்டக்கல்வி அலுவலரால் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டர். இதை எதிர்த்து கடந்த 11 ஆம் தேதி குளித்தலை மாவட்டக்கல்வி அலுவலகத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

இதன் காரணமாக அன்றே ஆசிரியரின் தற்காலிகப் பணி நீக்கம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

ஆனால், போராட்டம் நடத்தியதற்காக சங்கப் பொறுப்பாளர்கள் 7 பேர்
கரூர்
மாவட்ட முதன்மைக்கல்வி அலுவரின் உத்தரவின் பேரில் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயலாகும். 7 பேரின் தற்காலிகப் பணி நீக்கத்தை ஒன்றரை மாதம் கழித்து முதன்மை கல்வி அலுவலர் விலக்கிக்கொண்டு ஆணை பிறப்பித்துள்ளார்.

ஆனால், தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்ட 3 இடைநிலை ஆசிரியர்களை விதிகளுக்குப் புறம்பாக வேறு ஒன்றியங்களுக்கு பணிமாறுதல் செய்து ஆணை பிறப்பித்துள்னர். இடைநிலை ஆசிரியர்களின் முன்னுரிமை என்பது ஒன்றியத்திற்குள்ளேயே கணக்கிடப்படுகிறது. எனவே வேறு ஒன்றியத்திற்குப் பணியாறுதல் அளித்தது. அரசாணைகளுக்கு முரணானதாகும். அதேபோன்று தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர்கள் 3 பேரை அதே ஒன்றியத்திற்குள் வேறு பள்ளிகளுக்கு பணி மாறுதல் செய்துள்ளார். நியாயம் கேட்ட சங்கப் பொறுப்பாள்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள பழிவாங்கும் இந்நடவடிக்கைகளை உடனடியாகத் திரும்பப் பெற்று அவர்களை மீண்டும்
பழைய இடத்தில் பணியமர்த்த வேண்டும் என்று தொடக்கக் கல்வித்துறையை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

மேலும், தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களின் நியமண அலுவலர் மாவட்டக் கல்வி அலுவலர் ஆவார். தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், அதை விலக்கிக் கொள்ளவும், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கே அதிகாரம் உள்ளது. அந்த அதிகாரத்தைத் தானே எடுத்துக்கொண்டு அதிகார துஷ்பிரயோகத்தில் கரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஈடுபட்டுள்ளார். இவரது செயல்பாடுகள் மீது பள்ளிக்கல்வித்துறையில் விசாரணை மேற்கொண்டு அவர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கரூர்மாவட்டக் கல்வித்துறையின் தொடர் விதிமீறல்களையும், பழிவாங்கும் நடவடிக்கைகளையும் கண்டித்தும்,
தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் அவர்கள் முன்பு பணியாற்றிய பள்ளிகளில் பணிபுரிய அனுமதிக்கக் கோரியும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் வரும் 30-ந் தேதி முதல் கரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த உள்ளோம் என்றார்.

கூட்டத்தில் மாநில நிர்வாகிகள்,
மாவட்டச்செயலாளர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.