Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சென்னையில் பள்ளிக்கல்வித் துறை அதிகாரியாக நடித்து ரூ.3 கோடி சுருட்டிய பெண் உள்பட 3 பேர் கைது.

0

சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரியாக நடித்து, வேலை தருவதாக 100 பேர்களிடம் மோசடியில் ஈடுபட்டு, ரூ.3 கோடி சுருட்டிய பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்தவர் அமுதா. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது, “சென்னை பள்ளிக்கல்வித்துறை மற்றும் பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக ஆசைகாட்டி ஏராளமான பேர்களிடம் ரூ.3 கோடி வரை பணம் வசூலித்து ஒரு கும்பல் மோசடி செய்து விட்டது. வேலைக்காக போலியான பணி நியமன ஆணைகளையும் அந்த கும்பல் வழங்கியது. நானும் அந்த கும்பலிடம் பணத்தை இழந்தேன். அந்த மோசடி கும்பல் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து, மோசடி செய்த பணத்தை மீட்டுத்தர வேண்டும்.” இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கலாராணி இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில் சென்னை நன்மங்கலத்தைச் சேர்ந்த ரேணுகா (வயது 48) என்ற பெண், பள்ளிக்கல்வித்துறை அதிகாரியாக நடித்து, இந்த வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது. பள்ளிக்கல்வித்துறை அதிகாரியாக நடித்ததோடு நிற்காமல், இவர் போலி அடையாள அட்டை ஒன்றையும் தயாரித்து தனது மோசடி லீலைகளுக்கு பயன்படுத்தி உள்ளார்.

இவருக்கு உறுதுணையாக, சைதாப்பேட்டையைச் சேர்ந்த காந்தி (வயது 54), நெற்குன்றத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் (வயது 32), தேனியைச் சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோர் செயல்பட்டுள்ளனர். போலி கல்வித்துறை அதிகாரி ரேணுகா மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் போலியான அரசு வேலை பணிநியமன ஆணைகளை வழங்கி தமிழகம் முழுவதும் 100 பேர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். மோசம்போன இளைஞர்களிடம் இருந்து அவர்களது அசல் கல்வி சான்றிதழ்களையும் இந்த கும்பல் பெற்றுள்ளது. மேலும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில், மோசம் போன இளைஞர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தும் இந்த மோசடிக் கும்பல் நாடகமாடி உள்ளது.

கைதான மோசடி நபர்களிடம் இருந்து போலியான பணி நியமன ஆணை நகல்கள், மேலும் இளைஞர்களிடம் வாங்கிய அசல் கல்வி சான்றிதழ்கள் போன்றவற்றை போலீசார் கைப்பற்றினார்கள். மோசடி பணத்தில் வாங்கிய ரூ.40 லட்சம் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், செங்கல்சூளையில் ரூ.23 லட்சம் முதலீடு செய்த ஆவணங்கள் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.5 லட்சம் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

கைதான ரேணுகா கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். பிளஸ் 2 வரை படித்துள்ளார். இவரை பள்ளிக்கல்வித்துறை அதிகாரியாக நடிக்க வைத்து, இந்த மிகப்பெரிய மோசடி லீலைகளை அரங்கேற்ற மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி மோகன்ராஜ் ஆவார். இவர்தான், போலியான அடையாள அட்டை மற்றும் போலியான பணி நியமன ஆணைகளை தயாரித்துள்ளார்.

இந்த மோசடி கும்பல் பற்றி தொடர்ந்து விசாரணை நடப்பதாக போலீசார் தெரிவித்தனர். போலி அதிகாரியான ரேணுகா, பல்வேறு அரசு அலுவலகங்களில் நேரடியாக சென்று அதிகாரி என்ற தோரணத்தோடு வலம் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.