சனிக்கிழமை ஸ்பெஷல் .
ருசியான புளிச்சக்கீரை சாதம் தயார் செய்யும் முறை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.
தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது நம் உடலுக்கு மிகவும் நல்லது.
தேவையானப் பொருட்கள்:
உதிரியாக வடித்த சாதம் – 4 கப்
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – சிறிதளவு
உளுத்தம் பருப்பு – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 4
கறிவேப்பிலை – சிறிதளவு
அரைக்க:
வெங்காயம் – 4
பூண்டு – 15 பல்
மிளகு – 2 ஸ்பன்
பச்சை மிளகாய் – 8
புளிச்சக்கீரை – 2 கட்டு
உப்பு – தேவையான அளவு
செய்முறை விளக்கம்:
முதலில் புளிச்சக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வெங்காயம், பூண்டு, மிளகு, பச்சை மிளகாய், புளிச்சக்கீரை மற்றும் சிறிதளவு உப்பு ஆகியவற்றைப் போட்டு மிக்ஸியில் மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, 4 காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்க வேண்டும். பின் அதனுடன் அரைத்து வைத்துள்ள புளிச்சக்கீரை விழுது, சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும். புளிச்சக்கீரை என்பதால் உப்பு கொஞ்சம் அளவாக போட வேண்டும்.
கடைசியாக புளிச்சக்கீரையை நன்றாக வதக்கியவுடன் அதில் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து நன்றாக கிளறி இறக்கி பரிமாறினால், சத்தான புளிச்சக்கீரை சாதம் தயார்!!! .