ஹிஜாப் தடையை எதிர்த்து கோர்ட்டுக்கு சென்ற 6 பேரும் பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள். உடுப்பி கல்லூரி துணைத் தலைவர் திடுக் தகவல்.
ஹிஜாப் தடையை எதிர்த்து கோர்ட்டுக்கு சென்ற 6 பேரும் மாணவிகள் அல்ல, பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் என உடுப்பி கல்லூரி துணை தலைவர் திடுக்கிடும் குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளார்.
கர்நாடகாவில் உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பில் ஆஜராக தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் கர்நாடக ஐகோர்ட்டில் ரிட் மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு, முஸ்லிம் மாணவிகள் வகுப்பில் ஹிஜாப் அணிய தடை விதித்து கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும் தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்புக்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில்
உடுப்பி கல்லூரியின் வளர்ச்சி குழு துணை தலைவரான யஷ்பால் சுவர்ணா செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, கோர்ட்டுக்கு சென்ற 6 பேரும் நான் முன்பே கூறியது போன்று மாணவிகள் அல்ல. அவர்கள் பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள்.
3 நீதிபதிகளுக்கு எதிராக அவர்கள் அறிக்கை வெளியிட்ட விதம், அவர்கள் பயங்கரவாத அமைப்பினை சேர்ந்தவர்கள் என நிரூபித்து உள்ளது. ஐதராபாத்தில் இருந்து வந்த ஒரு பயங்கரவாத அமைப்பு, ஊடகங்களிடம் என்ன கூற வேண்டும் என அவர்களுக்கு பயிற்சி அளித்து உள்ளது.
அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி தொடர்புடைய அமைப்புகளை நாங்கள் வலியுறுத்தி உள்ளோம். இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவோர், இங்கே வாழவோ அல்லது பணியாற்றவோ அனுமதிக்க கூடாது. அவர்களது நம்பிக்கையை வளர்க்க கூடிய நாட்டுக்கு அவர்கள் செல்லட்டும். மற்ற ஏழை மாணவ மாணவிகளை அவர்கள் இடையூறு செய்ய கூடாது என்று கூறியுள்ளார்.
இந்த 6 பேருக்கும் (மாணவிகள்), படிக்கவோ, தேர்வு எழுதவோ விருப்பம் இல்லை. அவர்களுக்கு கல்வி கொள்கையை அழிப்பதும் மற்றும் பிற மாணவர்களை தொந்தரவு செய்வதுமே நோக்கம் என்றும் குற்றச்சாட்டாக அவர் கூறியுள்ளார்.