Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இலங்கைக்கு எதிரான 3-வது டி20 போட்டியை வென்று தொடரை முழுமையாக வென்றது இந்திய அணி.

0

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் போட்டி இமாசலபிரதேச மாநிலத்தில் உள்ள மலைவாச ஸ்தலமான தர்மசாலாவில் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக பதும் நிசாங்கா மற்றும் குணதிலகா களமிறங்கினர். இருவரும் விரைவாக ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த, அசலங்கா 4 ரன்னில் சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்து நடையை கட்டினார். தொடர்ந்து ஜரித் லியநாகே(9 ரன்கள்) ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 29 ரன்கள் எடுத்து தடுமாறிய நிலையில், அந்த அணியின் கேப்டன் தசுன் சணகா களமிறங்கினார். அவர் அதிரடியாக ஆடி 74 ரன்கள் (38 பந்துகள், 2 சிக்சர்கள், 9 பவுண்டரிகள்) குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு பக்கபலமாக நின்ற தினேஷ் சண்டிமால் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில், 20 ஓவரில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளையும், சிராஜ், ஹர்ஷல் படேல் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

இதனை தொடர்ந்து, 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சர்மாவும், கேப்டன் ரோகித் சர்மாவும் களமிறங்கினர். ரோகித் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஸ்ரேயஸ் அய்யர் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சஞ்சு சாம்சன்(18), தீபக் ஹூடா(21) வெங்கடேஷ் அய்யர்(5) ஆகியோர் குறைந்த ரன்களில் வெளியேறினாலும், ஸ்ரேயஸ் அய்யர் கடைசிவரை ஆட்டமிழக்காமல் உறுதியுடன் நின்று 73 ரன்கள் குவித்து அணி வெற்றிபெற உதவினார். இறுதியில் இந்திய அணி 16.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு இலக்கை கடந்து வெற்றிபெற்றது. ரவீந்திர ஜடேஜா 22 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை ஸ்ரேயஸ் அய்யர் வென்றார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
மேலும் தொடர்ந்து டி20 போட்டிகளை வென்று புதிய சாதனையை படைத்தது.

இதையடுத்து இலங்கை அணி இந்தியாவுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதன் முதல் போட்டியானது. வரும் மார்ச் 4-ஆம் தேதி மொகாலியில் நடைபெற உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.