தேர்தல் நாளில் பதுக்கி சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்பனைக்கு முயற்சி. திருச்சியில் பெட்டி, பெட்டியாக மது பாட்டில்கள் சிக்கின.
திருச்சி மணிகண்டம் ஆலம்பட்டிபுதூர் சாலையில் உள்ள அரசு மதுபான கடை அருகே தேர்தல் நாள் அன்று விற்பனைக்காக மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாகவும், மேலும் மது பாட்டில்கள் விற்பனை தற்போதே நடைபெறுவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அங்கு சென்ற போலீசார் மது பாட்டில் விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த பாலக்கரை பாக்கியராஜ், நாகமங்கலம் ராமசந்திரன், எடமலைப்பட்டிபுதுார் ஆறுமுகம் ஆகியோரை மடக்கி பிடித்துள்ளனர். அவர்களிடம் இருந்து பெட்டி, பெட்டியாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 861 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து திருவெறும்பூர் மது விலக்கு போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிந்து உள்ள நிலையில் தப்பி ஓடிய ஒருவரை தேடி வருகின்றனர்
திருச்சி ஈபி ரோடு,
திருச்சி கீழபுலிவார்டு ரோடு, சத்யமூர்த்தி நகர் பகுதியில், தேர்தல் நாளன்று விற்பனைக்காக ஏராளமான மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று நடத்திய விசாரணையில் கோமதி மற்றும் வீரப்பன் ஆகியோர் ஏராளமான மதுபாட்டில்களை கள்ளச்சந்தையில் வாங்கி பதுக்கி வைத்திருப்பது தொிய வந்தது. அவர்களிடம் இருந்து 567 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இருவர் மீதும் கோட்டை போலீசார் வழக்கு பதிந்து மேலும் வேறு ஏதேனும் இடத்தில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்துள்ளனரா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் மீது கோட்டை காவல் நிலையத்தில் ஏற்கனவே பல வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே போல கோட்டை பகுதியில் மட்டும் மேலும் 204 என மொத்தம் 771 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு 94 ஆயிரம் ஆகும்.
திருவரங்கத்தில் வாலிபர் கைது.
இதேபோல் திருவரங்கம் போலீசார் மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து கிழக்கு அடையவளஞ்சான் வீதி பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு விற்பதற்காக பதுக்கி வைத்திருந்த 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக திருவரங்கத்தை சேர்ந்த பிரகாஷ் (வயது 28) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ரெயிலில் சிக்கிய மதுப்பாட்டில்.
காரைக்காலிலிருந்து எர்ணாக்குளம் செல்லும் ரெயிலில் கடத்திச் செல்லப்பட்ட மது வகைகளை ரெயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று இரவு பறிமுதல் செய்தனர்..
திருச்சி வழியாக செல்லும் ரெயில்களில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் கடத்தி செல்லபடுகிறதா? என ரயில்வே போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் காரைக்காலில் இருந்து எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயில், தஞ்சை மாவட்டம் பூதலூர் ரெயில் நிலையத்தில் வந்து நின்றது. அப்போது ரயில்வே பாதுகாப்பு படையினர் உதவி ஆய்வாளர் வாசுதேவன் தலைமையிலான குழுவினர் அந்த ரெயிலில் சோதனை செய்தனர்.
அப்போது மர்மான முறையில் ரெயில் பெட்டியில் ஒரு பை இருந்தது. அந்த பையை சோதனை செய்து பார்த்தபோது, அதில் யாரோ மர்ம நபர்கள் 18 மதுப்பாட்டில்களை கடத்தி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அவற்றை மீட்டு, ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரெயில்வே போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.