Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அதிக உயிர் இழப்பை ஏற்படுத்தும் புதிய கொரோனா.சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கை.

0

 

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 டிசம்பரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வரவில்லை.மாறாக டெல்டா, பீட்டா, காமா, ஒமைக்ரான் என உருமாறிய பல கொரோனா வைரஸ்கள் உலகை ஆட்டிப்படைத்து வருகின்றன.

தென் ஆப்பிரிக்காவில் கடைசியாக கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் குடும்ப வைரஸ்கள் அதிகளவில் பரவினாலும் லேசான பாதிப்புகளையே ஏற்படுத்தி வருவது ஆறுதல் அளிக்கிறது.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் ‘‘நியோகோவ்’’ என்ற பெயரிலான உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இதுபற்றி ரஷியாவின் ஸ்புட்னிக் செய்தி நிறுவனம் தகவல்களை வெளியிட்டுள்ளது. அவற்றின்படி, நியோகோவ் வைரஸ், சுவாச நோயை ஏற்படுத்துகிற மெர்ஸ்-கோவ் உடன் தொடர்புடையதாகும்.

அதே நேரத்தில் இந்த நியோகோவ் வைரஸ் முற்றிலும் புதியது அல்ல. ஏனெனில் இது மெர்ஸ்-கோவ் வைரசுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் பாதிப்புகள் மத்திய கிழக்கு நாடுகளில் 2012 மற்றும் 2015 ஆண்டுகளுக்கு இடையே காணப்பட்டுள்ளது.

இந்த நியோகோவ் வைரஸ் பற்றி சீன விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கையில் கூறிய முக்கிய தகவல்கள்:-

* நியோ கோவ் வைரஸ்கள் வவ்வால்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

* பகுப்பாய்வு செய்கிறபோது நியோகோவ் வைரசின் போக்கு சார்ஸ் கோவ்-2 வைரசைப்போல தோன்றுகிறது.

* இந்த வைரஸ் மிக அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தும்-.
இவ்வாறு சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய வைரஸ் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து கூடுதல் ஆய்வு தேவைப்படும் என்று உலக சுகாதார அமைப்பு, ரஷிய செய்தி நிறுவனமான டாஸிடம் தெரிவித்துள்ளது.

வளர்ந்து வரும் ஜுனோடிக் வைரஸ்களின் அச்சுறுத்தலைக் கண்காணித்து, பதில் அளிப்பதற்கு உலக விலங்கு ஆரோக்கியத்துக்கான அமைப்பு, உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு மற்றும் ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு ஆகியவற்றுடன் நெருக்கமாக செயல்பட்டு வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு கூறுகிறது

இதற்கு மத்தியில் ஒரு ஆறுதலான தகவலை ரஷிய அரசு வைராலஜி மற்றும் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையம் அளித்திருக்கிறது. அது, ‘‘நியோகோவ் கொரோனா வைரஸ் தொடர்பாக சீன ஆராய்ச்சியாளர்களால் பெறப்பட்ட தரவுகளை வெக்டர் ஆராய்ச்சி மையம் அறிந்திருக்கிறது.

தற்போது இந்த புதிய வைரஸ், மனிதர்களிடையே தீவிரமாக பரவுகிற தன்மை கொண்டதல்ல’’ என்பதுதான். எனவே இப்போதைக்கு இந்த வைரசைப்பற்றி பயப்படத்தேவையில்லை என்று நம்பலாம்.

Leave A Reply

Your email address will not be published.