16 அணிகள் இடையிலான 14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் பி பிரிவில் இந்திய அணி சிறிய அணியான உகாண்டாவுடன் மோதியது. டாஸ் வென்ற உகாண்டா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரரான ரகுவன்சி பொறுப்புடன் விளையாடி 144 ரன்களை குவித்தார். மிடில் ஆர்டரில் ராஜ் பாவா அதிரடியாக விளையாடி 14 பவுண்டரி, 8 சிக்சருடன் 162 ரன்களை விளாசினார். உகாண்டா அணியின் பந்துவீச்சாளர்களால் இந்திய அணியில் அதிரடி ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 405 ரன்கள் குவித்தது. இதையடுத்து 406 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உகாண்டா அணி களமிறங்கியது. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணி மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தது. கேப்டன் பஸ்கல் முருன்கி அதிகபட்சமாக 34 ரன்கள் எடுக்க, மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
முடிவில் உகாண்டா 19.4 ஓவர்களில் 79 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்து. இதன் மூலம் இந்திய அணி 326 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை ருசித்தது. இந்திய அணி தரப்பில் கேப்டன் நிஷாந்த் சிந்து அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். 162 ரன்கள் குவித்த ராஜ் பவா ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.