திருச்சி காப்பகத்தில் 2 பேர் திடீர் மாயம்.போலீசார் விசாரணை.
திருச்சி காப்பகத்தில் இருந்து மாயமான 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி எடமலைப்பட்டி ஹோப் ஆதரவற்றவர்கள் இல்லத்தில் தங்கியிருந்த கண்ணன் (வயது16) என்ற மாணவனை காணவில்லை என்று அந்த தொண்டு நிறுவனத்தின் நிர்வாகத் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. கடந்த 16-ம் தேதி இரவு உறங்கச் சென்ற கண்ணன் மறுநாள் காலை 6 மணிக்கு வழக்கமாக காலைக்கடன்களை முடிக்க வரவேண்டிய கண்ணன் வராததால் சந்தேகமடைந்த தொண்டு நிறுவன பணியாளர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலைய போலீசாரிடம் புகார் செய்துள்ளனர்.
மேலும் திருச்சி கிராப்பட்டி புனித தோமையார் கருணை இல்லத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த சபரி அம்மாள் என்ற மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி கடந்த 17-ம் தேதி முதல் காணவில்லை என்று எடமலைப்பட்டி புதூர் காவல்நிலையத்தில் கருணை இல்லத்தில் மேலாளர் எலிசபெத் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார்.
கடந்த 2020 ஜனவரி மாதம் சோமரசம்பேட்டை பகுதியில் இருந்து மீட்கப்பட்டு தற்போது கிராமத்தில் உள்ள புனித தோமையார் கருணை இல்லத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்த சபரி அம்மாளுக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டதால் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. எனவே கருணை இல்ல சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.