Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நாளை தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாட உள்ளார்.

0

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி ஒயிட் வாஷ் செய்தது.

2 டெஸ்ட் போட்டி தொடரில் கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் டிரா ஆனது.

இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நாளை (3-ந் தேதி) தொடங்குகிறது.

முதல் டெஸ்டில் இந்திய அணி மயிரிழையில் வெற்றி வாய்ப்பை இழந்தது. நியூசிலாந்தின் கடைசி விக்கெட் ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் வெற்றி பறிபோனது. இதை சரிசெய்யும் வகையில் 2-வது டெஸ்டில் வெற்றி பெற்று இந்தியா தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது.

20 ஓவர் தொடர் மற்றும் முதல் டெஸ்டுக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட கேப்டன் விராட் கோலி நாளைய டெஸ்டில் ஆடுகிறார். அவரது வருகை அணிக்கு பேட்டிங்கில் மேலும் பலம் சேர்க்கும்.

விராட் கோலிக்காக அணியிலிருந்து யார் நீக்கப்படுவார் என்று ஆவலுடன் எதிர்நோக்கப்படுகிறது. ஸ்ரேயாஸ் அய்யர் கடந்த டெஸ்டில் அறிமுகம் ஆனார். முதல் இன்னிங்சில் சதமும், 2-வது இன்னிங்சில் அரை சதமும் அடித்து அவர் முத்திரை பதித்தார். இதனால் ஸ்ரேயாஸ்அய்யர் நீக்கப்பட வாய்ப்பு இல்லை.

கடந்த டெஸ்டில் கேப்டனாக பணியாற்றிய ரகானே நீக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. கடந்த 16 டெஸ்டில் அவரது சராசரி 24.39 ஆகும். இதேபோல தொடக்க வீரர் மயங்க் அகர்வால், புஜாரா ஆகியோரது பேட்டிங்கும் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. இந்த 3 பேரில் ஒருவர் கழற்றிவிடப்படலாம்.

முதல் டெஸ்டில் காயத்துடன் ஆடிய விர்த்திமான் சஹா முழு உடல் தகுதியுடன் இருக்கிறாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. அவர் ஆட முடியாமல் போனால் புதுமுக விக்கெட் கீப்பர் பரத்துக்கு வாய்ப்பு கொடுக்கப்படும்.

சுழற்பந்தில் அஸ்வின், அக்‌ஷர் படேல், ஜடேஜா ஆகியோர் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர். மூவரும் சேர்ந்து முதல் டெஸ்டில் 17 விக்கெட் சாய்த்தார்கள்.

வேகப்பந்து வீச்சில் மாற்றம் கொண்டு வந்தால் முகமது சிராஜிக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம்.

நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் டாம் லாதம், வில் யங் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இதுதவிர கேப்டன் வில்லியம்சன், ரோஸ் டெய்லர் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் இருக்கிறார்கள்.பந்து வீச்சில் சவுத்தி, ஜேமிசன் முத்திரை பதிக்க கூடியவர்கள். அஜாஸ் படேல் சுழற்பந்தில் சிறப்பாக செயல்படக் கூடியவர்.

இரு அணிகளும் இதுவரை 61 டெஸ்டில் மோதியுள்ளன. இதில் இந்தியா 21-ல், நியூசிலாந்து 13-ல் வெற்றி பெற்றுள்ளன. 27 டெஸ்ட் டிரா ஆனது

Leave A Reply

Your email address will not be published.