Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழ் புத்தாண்டை தை மாதம் மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும், சசிகலா அறிக்கை.

0

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ் புத்தாண்டை மீண்டும் தை மாதத்திற்கு மாற்றப்போவதாக வரும் செய்திகள் உண்மைதானா? என்ற கேள்வி எல்லோருக்கும் எழுகிறது. இது சம்பந்தமாக தமிழக அரசிடமிருந்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வந்ததாக தெரியவில்லை. பின் எதற்காக, இது போன்ற செய்திகள் பரப்பப்படுகின்றன என்பது புரியாத புதிராக உள்ளது.

அதேபோல், கடந்த வாரத்தில் மதுரை ஜெய்ஹிந்த் புறத்தில் உள்ள அம்மா உணவகத்தில் திடீரென்று கருணாநிதி படம் வைத்ததாக செய்திகள் வந்தன. பின்னர் மறுநாளே அந்த படம் அகற்றப்பட்டதாகவும் செய்திகள் வந்தன.

இதுபோன்ற செயல்கள், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தெரிந்துதான் நடக்கிறதா? இல்லை அவருக்கு தெரியாமலேயே எதாவது ஒரு அதிகாரம் மையத்தின் தலையீட்டால் நடக்கிறதா? என்ற அடுக்கடுக்கான கேள்விகள் சாமானிய மக்களுக்கு தொடர்ந்து எழுகின்றன.

தமிழ்ப் புத்தாண்டு எதற்காக சித்திரை மாதத்தில் கொண்டாடப்படுகிறது என்பதற்கு சரியான விளக்கத்தை, பல்வேறு ஆதாரங்களுடன் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அன்றே தெரிவித்து இருக்கிறார்.

எனவே இதுபோன்று மக்களுக்கு உதவாத செயல்களில் அரசு நேரத்தை செலவிடுவதை தவிர்த்து, குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்த வழிவகை செய்தாலே போதும், அதுவே மக்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

ஆகையால், தமிழக அரசு, தமிழ்ப் புத்தாண்டை தை மாதத்திற்கு மாற்றும் முயற்சியை விட்டு விட்டு, ஆக்கப்பூர்வமான செயல்களில் தங்கள் நேரத்தை செலவழித்து மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களை வழங்க வேண்டும்.

இவ்வாறு சசிகலா தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.