திருச்சியில் பொது சுகாதாரத்துறை அமைச்சுப்பணி அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டத்தில் மாநிலம் அளவில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடத்த தீர்மானம்.
தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அமைச்சுப்பணி அலுவலர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி புனித ஜான் வெஸ்டிரி பள்ளி கூட்ட அரங்கில் மாநிலத் தலைவர் பகவதியப்பன் தலைமையில் நடைபெற்றது.
மாநில பொது செயலாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார்.
மாவட்டத் தலைவர் வேல்முருகன் வரவேற்புரையாற்றினார்.
இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:
1.
பொது சுகாதாரத்துறையில்
தொழில்நுட்ப பணியாளர்களின் எண்ணிக்கைக்கு விகிதச்சார அடிப்படையில் அரசு விதிகளின் அமைச்சுப்பணியாளர்கள் பணியிடம் உருவாக்காமல், அரசு காலம் தாழ்த்தி வருகிறது. பொது சுகாதாரத்துறையில் 45000-க்கு மேற்பட்ட காலமுறை ஊதிய பணியிடங்களும்,30000-க்கு மேற்பட்ட ஒப்பந்த ஊதிய பணியிடங்களும் உள்ள நிலையில் அப்பணியிடத்திற்கு இணையாக அமைச்சுப்பணியிடங்கள் உருவாக்க ஏற்கனவே உள்ள நிர்வாக அமைப்பை மறு சீரமைப்பு செய்யப்படவேண்டும்.
2.
அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரே மாதிரியான நிர்வாக அமைப்பு உருவாக்கிட அரசாணை எண்.235 மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, நாள்.28.06.2007-ன்படி, 385 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் கண்காணிப்பாளர் பணியிடங்கள் ஒப்பளிப்பு செய்து ஆணை வழங்கப்பட்டது அதன்படி, தற்போது விடுப்பட்டுள்ள வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கண்காணிப்பாளர் பணியிடம் உடனடியாக வழங்கப்படவேண்டும்.
3.
தேசிய நலச்சங்கம் திட்டத்தின் மூலம்
பல்வேறு காலமுறை பணியிடங்கள் கடந்த காலங்களில் தோற்றுவிக்கப்பட்ட நிலையில்,மாவட்ட அளவில் NRHM திட்டப்பணிகள் குறித்த நிர்வாக பணிகள் கண்காணிக்க இளநிலை நிர்வாக அலுவலர் (Junior Administrative Officer) பணியிடம், தேசிய நலச்சங்கம் மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டும், மாநில அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நாளதுவரை அரசு ஆணை வழங்கப்படாமல் காலதாமதம் செய்து வருவதை தவிர்த்து உடனடியாக இளநிலை நிர்வாக அலுவலர் பணியிடம் ஒப்பளிப்பு செய்யப்பட வேண்டும்.
4.
தேசிய நல சங்கத்தின் நிதிகளை செலவினம் மேற்கொள்வதில் பல முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்கவும், அலுவலக நடைமுறை படி திட்டப்பணிகள் செயல்படுத்தவும், கணக்கு உதவியாளர்கள் மற்றும் தகவல் பதிவு செய்பவர்கள் பணி குறித்து தகுந்த அறிவுரை வழங்க நம் சங்கத்தின் மூலம் அளிக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு மாநில நலச்சங்க குழும இயக்குநரின் நடவடிக்கை ஏற்கதக்க வகையில் இல்லை. மேலும் பொது சுகாதார துறை நிர்வாகத்தில் குழும் இயக்குநரின் அதிதீவிர குறுக்கீடு செய்வதை கண்டித்தும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாபெரும் மாநிலம் தழுவிய கவனஈர்ப்பு உண்ணாவிரதம் நடத்த ஏகமனதாக இப்பொதுக்குழு மூலம் தீரமானிக்கப்படுகிறது.
உள்ளிட்ட 17 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் மாநில துணை தலைவர் ரவிச்சந்திரன்,திருச்சி மாவட்ட நிர்வாகிகள் ராஜேந்திரன், செல்வகுமார், கோணேஸ்வரி, தினேஷ், பாபு, வெங்கடேஷ் பாபு, நாகராஜ், பாலசுப்பிரமணியன்,பிரபாகரன், ரேவதி, ராஜாத்தி, கவிதா, ராஜேந்திரன், ரங்கராஜ், கருணாநிதி, விஜய், ரமேஷ் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முடிவில் மாநில பொருளாளர் ஜோதி பிரசன்னா நன்றி கூறினார்.