7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த மாதம் 17-ந்தேதி தொடங்கியது.
16 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் முதல் சுற்று மற்றும் சூப்பர்-12 சுற்று முடிவில் நியூசிலாந்தும், ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி நியூசிலாந்து அணி தொடக்க வீரர்களாக மார்ட்டின் கப்தில், டேரில் மிட்செல் களமிறங்கினர் .தொடக்கவீரர் டேரில் மிட்செல் 8 பந்துகளில் ( 1 சிக்சருடன்) 11 ரன்களில் ஹேசில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து மார்ட்டின் கப்டில் 35 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து அதிரடியாகி விளையாடிய வில்லியம்சன் 32 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். 48 பந்துகளில் (10 பவுண்டரி 3 சிக்ஸர்) 85 ரன்கள் குவித்து அவர் ஆட்டமிழந்தார்
நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 173 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான ஆரோன் பிஞ்ச் 5 ரன்களில் கேட்சாகி ஆட்டமிழந்தார்.
டேவிட் வார்னர் மிட்செல் மார்ஷ் ஜோடி தொடக்க முதலே அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
இந்த நிலையில், அதிரடியாக ஆடிய டேவிட் வார்னர் 38 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மிட்செல் மார்ஷ் 50 பந்துகளில் 77 ரன்கள் (6 பவுண்டரி 4 சிக்ஸர்) எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். கிளைன் மேக்ஸ்வெல் 18 பந்துகளில் 28 ரன்கள் (4 பவுண்டரி 1 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஆஸ்திரேலிய அணி 18.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் குவித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றது.
தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் தொடர் நாயகனாகவும்,
இப் போட்டியில் சிறப்பாக விளையாடிய மிட்சல் மார்ஷ் ஆட்ட நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.