கேப்டனாக கோலி விளையாடிய கடைசி டி20 போட்டியில் நமிபியாவை எளிதாக வென்றது இந்தியா.
கேப்டனாக கோலி விளையாடிய கடைசி டி20 போட்டியில் நமிபியாவை எளிதாக வென்றது இந்தியா.
டி 20 உலகக்கோப்பையில் சூப்பர் 12 சுற்றின் கடைசி போட்டியில் இந்தியா- நமிபியா அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி நமிபிய அணி முதலில் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஸ்டீபன் பார்ட் 21 ரன்கள் எடுத்தார். டேவிட் வைஸ் அதிகபட்சமாக 26 ரன்கள் எடுக்க மற்ற பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் வெளியேறினர். இறுதியில் நமிபிய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜாவும், ரவிச்சந்திரன் அஸ்வினும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர்133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் சார்பில் ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.
அதிரடியாக ரன் சேர்த்த இந்த ஜோடியில் ரோகித் சர்மா 31 பந்துகளில் அரைசதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து அவர் 56 (37) ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் ஆனார். அடுத்ததாக கே.எல்.ராகுலுடன், சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல்.ராகுல் 35 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய இந்த ஜோடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றது.
இறுதியில் கே.எல்.ராகுல் 54 (36) ரன்களும், சூர்யகுமார் யாதவ் 25 (19) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
முடிவில் இந்திய அணி 15.2 ஒவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 136 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் நமிபியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.
விராட் கோலி டி20 போட்டிகளில் இந்திய அணிக்கு கேப்டனாக விளையாடிய கடைசி போட்டி இதுவாகும்.
இந்த போட்டியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.