Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பாஜக மூத்த தலைவர் அத்வானி பிறந்தநாள். மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நேரில் வாழ்த்து.

பாஜக மூத்த தலைவர் அத்வானி பிறந்தநாள். மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நேரில் வாழ்த்து.

0

பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 300-க்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். டெல்லியில் விவசாயிகள் போராட்டம், இடைத்தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்ட படுதோல்வி உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறுவது குறித்து நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை நடத்தினர். கடந்த 2019-ல் கொரோனா ஏற்பட்டதை தொடர்ந்து தற்போதுதான் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இதில் கட்சியின் மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்டனர். மிக நீண்ட நாட்களுக்கு பின்னர் இந்த இருவரும் கட்சியின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதோடு, பொது வெளியில் தங்கள் முகம் காட்டியுள்ளனர். இந்த நிகழ்வு பா.ஜ.க. தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அத்வானி நீண்ட நாட்களாக பொது வெளியில் பங்கேற்காமல் இருந்தார். அவரது உடல்நிலை குறித்து கேள்விகள் எழுந்த நிலையில், நேற்று அவர் வீடியோ கான்பரன்சிங் மூலம் செயற்குழுவில் பங்கேற்றுள்ளார். கூட்டத்தின்போது கொரோனா பிரச்சினையை சிறப்பாக கையாண்டதற்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

அத்வானிக்கு இன்று 94-வது பிறந்த நாள். இதையடுத்து அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், அமித் ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் டெல்லியில் உள்ள அத்வானியின் இல்லத்திற்கு சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் அனைவரும் அத்வானியுடன் அமர்ந்து சிறிது நேரம் கலந்துரையாடினர். பின்னர் அவர் இல்லத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

பிரதமர் மோடி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,

‘ஆரோக்கியமாக, நீண்ட நாட்கள் அத்வானி அவர்கள் வாழ வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். மக்களை வலிமைப்படுத்தவும், கலாசாரத்திற்கு பெருமை சேர்க்கவும் பல தியாகங்களை அத்வானி செய்துள்ளார். இதற்காக நாடு அவருக்கு கடன்பட்டுள்ளது.’ என்று கூறியுள்ளார்.

“அத்வானி ஒரு நல்ல வழிகாட்டி”என்று பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் புகழாரம் சூட்டினார். மேலும் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட அவரது புலமை, தொலைநோக்கு மற்றும் அறிவுத்திறன் கொண்ட மிகவும் மரியாதைக்குரிய தலைவர்களில் ஒருவராக கருதப்படுகிறார் என்று கூறி உள்ளார்.

பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா கூறி இருப்பதாவது:-

கட்சியை மக்களிடம் கொண்டு சென்று நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் அத்வானி. கோடிக்கணக்கான கட்சித் தொண்டர்களுக்கு உத்வேகம் அளித்தவர். அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன் என கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.