Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி. ரூ.2.39 கோடி மோசடி.3 பேர் தற்காலிக பணி நீக்கம்.

கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி. ரூ.2.39 கோடி மோசடி.3 பேர் தற்காலிக பணி நீக்கம்.

0

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெற்ற நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என சட்டசபை தேர்தல் பரப்புரையின்போது மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அந்த வகையில் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெற்ற நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார். இதனையடுத்து, பல மாவட்டங்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.

அவ்வாறு விதிகளை மீறி பெறப்பட்ட நகைக்கடன் தொகையை வசூலிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். அதில், 5 சவரனுக்கு அதிகமாக விதிகளை மீறி நகைக்கடன் பெற்றவர்களின் ஆதாரங்களை சேகரிக்க வேண்டும் எனவும், முறைகேடுகளில் ஈடுபட்டவர்களிடம் இருந்து நகைக்கடனை வசூலிக்கவும், தவணை தொகையை கட்ட தவறியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக தற்போது கூட்டுறவு வங்கிகளில் பொது நகைக்கடன் முறைகேடு நடந்திருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆரணி நகர கூட்டுறவு வங்கியில் அதிகாரிகளை கொண்டு ஆய்வு மேற்கொண்டதில் 77 போலி நகைகள் மற்றும் தரம் குறைவான சீல் வைக்கப்பட்ட நகைப் பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில நபர்களுக்கு குறைவாக எடை கொண்ட நகைகளுக்கு அதிக எடை என எழுதப்பட்டு கூடுதலாக நகைக்கடன் வழங்கி முறைகேடில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. மொத்தம் 2 கோடியே 39 லட்சம் இவ்வாறு மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, போலி நகைக்கடன் வழங்க உறுதுணையாக இருந்த வங்கி பணியாளர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் மீது தக்க நடவடிக்கை மற்றும் விசாரணை மேற்கொள்ள திருவண்ணாமலை இணைப்பதிவாளர் ,கூட்டுறவு சங்க பதிவாளருக்கு பரிந்துரைத்துள்ளார்.

இதன் அடிப்படையில் வங்கி பணியாளர்கள் 3 பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முறைகேடில் ஈடுபட்ட பணியாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. அதேபோல முறைகேடு தொடர்பான செய்யாறு துணைப்பதிவாளர் விசாரணை மேற்கொள்ள ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.