தற்கொலை சம்பவங்கள் தொடராமல் இருக்க பள்ளிகளில் மனோதத்துவ பாடப்பிரிவு தொடங்க வேண்டும். அரசுக்கு வழக்கறிஞர் மகேஷ்வரி வையாபுரி வேண்டுகோள்.
தற்கொலை சம்பவங்கள் தொடராமல் இருக்க பள்ளி, கல்லூரிகளில் மனோதத்துவ பாடப்பிரிவு தொடங்க வேண்டும்.
மத்திய,மாநில அரசுக்கு உபயோகிப்பாளர் உரிமை இயக்கம் கோரிக்கை.
உபயோகிப்பாளர் உரிமை இயக்க மாநில பொதுச் செயலாளர் வக்கீல் மகேஸ்வரி வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மருத்துவ சேவை என்பது புனிதமான சேவை ஆகும். இந்த மருத்துவ சேவை செய்ய மருத்துவக்கல்லூரியில் கல்வி கற்க நுழைவுத் தேர்வு கடந்த சில வருடங்களாக மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொருத்தவரை நீட் தேர்வுக்கு மாணவர்கள் ஆதரவுவா? இல்லை எதிர்ப்பா? என்பது இன்னமும் புரியாத புதிராக இருந்து வருகிறது.
இந்த நிலையில் சிலஅரசியல் கட்சிகள், தமிழக அரசு தமிழகத்திற்கு நீட்தேர்வு கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் தற்பொழுது நீட் தேர்வு நடந்து உள்ளது.இந்த தேர்வில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதி இருக்கும் சூழ்நிலையில் நீட் தேர்வுக்கு பயந்து மாணவிகள் சிலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகவும் வேதனையை அளிக்கிறது.
மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கும் மாணவர்கள் தங்களை நீட் தேர்வுக்கு தயார்படுத்தி கொள்ள வேண்டும் என்பது இன்றைக்கு கட்டாயமான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் சிலர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்கின்றனர்.
இதுபோன்ற பரிதாப சம்பவங்கள் இனி தொடராமல் இருக்குமேயானால் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அதே சமயத்தில் மாணவர்கள் வெற்றி, தோல்வி இரண்டையும் சமமாக எண்ணுகின்ற நிலையை மனதில் உருவாக்கி கொள்ள வேண்டும். வருங்கால சமுதாயம் மாணவர்கள் கையில் தான் உள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் மாணவர்களின் நலனில் அக்கறை செலுத்தும் வகையில்
பள்ளி, கல்லூரிகளில் மனோதத்துவ பாடப்பிரிவை தொடங்க வேண்டும்.
அவ்வாறு மனோதத்துவ பாடப்பிரிவு தொடங்கப்பட்டால் மாணவர்கள் இதுபோன்ற தற்கொலை சம்பவங்களில் ஒருபொழுதும் ஈடுபடமாட்டார்கள். எந்த பிரச்சினை, தோல்வி களையும் சமாளிக்கும் திறன் உருவாகிவிடும்.
மேலும் பெற்றோர் தங்களின் பிள்ளைகளின் மனநிலையை புரிந்து கொண்டு கல்வி விஷயத்தில் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் மகேஸ்வரி வையாபுரி கூறியுள்ளார்.