10ம்வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு துணைத் தேர்வு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி. சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
செப்டம்பர் 15 முதல் 30 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத்தேர்வுகள் நடைபெற உள்ளது: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் சாமி.சத்திய மூர்த்தி தகவல்.
செப்டம்பர் 2021 பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்விற்கான முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தேர்வுக் கூட அரங்கில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தலைமை வகித்து அவர் பேசும்போது கூறியதாவது:
தேர்வு மையங்களில் தேர்வறையில் 20 என்ற எண்ணிக்கையில் தேர்வர்களை சமூக இடைவெளியோடு அமர வைக்க வேண்டும்,தேர்வு நாளன்று நுழைவு வாயிலில் கூட்டம் போடுவதை தவிர்க்கும் பொருட்டு கண்டிப்பாக சமூக இடைவெளிக்கான நெறிமுறைகளை கடைப்பிடித்தல் வேண்டும்
தேர்வறைக்குள் அனுமதிக்கும் நேரம் வரை தேர்வர்கள் சமூக இடைவெளியுடன் அமர்ந்து தேர்வுக்கு தயாராவதற்கு ஏதுவாக முதன்மைக் கண்காணிப்பாளர் போதுமான எண்ணிக்கையில் காத்திருப்பு அறைகளை அமைத்தல் வேண்டும்.

தேர்வர்கள் காத்திருக்கும் அறைக்கு வெளியே இருப்பதற்கு அனுமதித்தல் கூடாது.தேர்வு மையத்திற்கு அருகில் உணவுப் பொருட்களை விற்பனை செய்பவர் எவரும் இல்லை என்பதை உறுதிபடுத்திக் கொள்ளுதல் வேண்டும்.
தேர்வு துவங்குவதற்கு முன்பும்,தேர்வு முடிவடைந்த பின்பும் தேர்வு மையங்களில் உள்ள தேர்வறைகள் மற்றும் தேர்வுப்பணி நடைபெறும் அறைகளில் உள்ள மேசை,நாற்காலி, கதவு,ஜன்னல் ஆகியவற்றில் கிருமிநாசினி தெளிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தேர்வு மையத்தில் கை கழுவுதற்கு சோப்பு மற்றும் தண்ணீர்வசதி ஏற்பாடு செய்தல் வேண்டும்.தேர்வு நடைபெறும் நாட்களில் தேர்வு மையத்திற்கு வருகை புரியும் பணியாளர்கள், ஆசிரியர்கள் , தேர்வர்கள் அனைவருக்கும் தேர்வு மையத்திற்குள் நுழையும் போது தெர்மல்ஸ்கேனர் கொண்டு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுதல் வேண்டும்.தேர்வர்கள் தங்களுடன் தண்ணீர்பாட்டில், கிருமிநாசினி எடுத்து வந்திருந்தால் அதனை தேர்வறைக்குள் எடுத்துவர அனுமதிக்க வேண்டும்.
தேர்வு மையத்திற்குள் ஆசிரியர்கள்,பணியாளர்கள்,தேர்வர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.தேர்வு மைய வளாகத்திற்குள் தேர்வுப் பணி தொடர்பில்லாத நபர்களை அனுமதித்தல் கூடாது.
தேர்வர்களை தேர்வு மையத்திற்கு அழைத்து வரும் ,அழைத்துச் செல்லும் பெற்றோர்கள் தேர்வு மையத்திற்கு வெளியே காத்திருக்கும் போது முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் சமூக இடைவெளியினைப் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வேண்டும்.
மேற்குறிப்பிட்ட அறிவுரைகளைப் பின்பற்றி செப்டம்பர் 2021 பத்தாம் வகுப்பு,மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத்தேர்வுகளை எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வகையில் சிறப்பாக நடத்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மேலும் பத்தாம் வகுப்பு,மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்வினை எழுதும் தேர்வர்கள் தங்களது விண்ணப்ப எண் அல்லது நிரந்தரப் பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றார்.
கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலர் கே.எஸ்.இராஜேந்திரன்,அறந்தாங்கி மாவட்டக்கல்வி அலுவலர் கு.திராவிடச் செல்வம்,இலுப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர் ப.சண்முகநாதன், பள்ளித்துணை ஆய்வாளர்கள் மற்றும் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் ,துறை அலுவலர்கள் , வழித்தட அலுவலர்கள்,வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.