Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பாராம்பரியம் இழந்த டவுன் ரயில்வே நிலையம்.மேன்மைப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை.

0

 

பாரம்பரிய பெருமை இழந்த

திருச்சியின்
‘மாம்பலம்’
ரயில் நிலையம்.


திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் மற்றும் ஸ்ரீரங்கம் ரெயில் நிலையங்களுக்கு இடையில், டவுன் ரயில் நிலையம் உள்ளது.

திருச்சி மாநகரத்திற்கு வருவதற்கு ரயில் போக்குவரத்து மட்டுமே என்று இருந்த காலகட்டத்தில், திருச்சி டவுன் ரயில் நிலையம் பரபரப்பான ரயில் நிலையமாக இருந்தது.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், எழுத்தாளர் சுஜாதா உள்ளிட்ட பேராளுமைகள் இந்த ரயில் நிலையத்தில் இறங்கி தான் கல்லூரிக்கு சென்றனர்.

*திருச்சியின் ‘மாம்பலம்’*

திருச்சி நகரின் மைய பகுதியில் இந்த ரயில் நிலையம் அமைந்துள்ளது. திருச்சியின் மிகப்பெரிய ஜவுளி கடைகள், நகை கடைகள், வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் உள்பட வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த, மலைக்கோட்டை, பெரிய கடைவீதி, சின்ன கடைவீதி மற்றும் காந்தி மார்க்கெட் ஆகியவை இந்த ரயில் நிலையத்தை சுற்றியே அமைந்துள்ளன.

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், சென்னையின் மாம்பலம் ரயில் நிலையத்திற்கு ஒப்பானது, திருச்சி டவுன் ரயில் நிலையம்.

*நின்று செல்லும் ரயில்கள்*

திருச்சி-சென்னை கார்டு லைன் மார்க்கத்தில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையத்தின் வழியாக தான் தென் மாவட்டங்களில் இருந்து திருச்சியை கடந்து செல்லும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், அனைத்து ரயில்களும் இந்த சிறிய ரயில் நிலையத்தில் நிற்பது இல்லை என்றாலும், திருச்சியின் அடையாளமான மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் மட்டும் இந்த ரயில் நிலையத்தில் அன்றாடம் நின்று செல்கிறது.

இதுதவிர விருத்தாசலம்- திருச்சி, கடலூர்- திருச்சி, லால்குடி- திருச்சி, விழுப்புரம்- மதுரை பாசஞ்சர் ரயில்கள் இந்த ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன.

விழுப்புரத்தில் இருந்து திண்டுக்கல் வரை இருவழி ரெயில் பாதை அமைக்கும் திட்டத்தின் கீழ் இரு வழிப்பாதை அமைக்கப்பட்ட பின்னர், இங்கு இரண்டு பிளாட்பாரங்கள் இயங்கி வருகின்றன.

*பயணிகள் அவதி*

சென்னையில் இருந்து திருச்சிக்கு வரும் ரயில்கள் பெரும்பாலும் இரண்டாவது பிளாட்பாரத்திலேயே பயணிகளை இறக்கி விடுகிறார்கள்.

இந்த பிளாட்பாரத்தில் இறங்கும் பயணிகள், முதலாவது பிளாட்பாரத்தை கடந்து தான் ரயில் நிலையத்திற்கு வெளியே செல்ல முடியும்.

ஆனால், இரண்டாவது பிளாட் பாரத்தில் இருந்து முதலாவது பிளாட்பாரத்திற்கு செல்வதற்கு சுரங்கப்பாதையோ அல்லது நடை மேம்பாலமோ இல்லை.

இதனால் பயணிகள் தண்டவாளத்தை கடந்து தான் செல்ல வேண்டியது உள்ளது. அதே போல், இரண்டாவது பிளாட்பாரத்தில் நிற்கும் ரயில்களில் ஏறுவதற்கும் முதலாவது தண்டவாளத்தை கடந்து தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இப்படி கடந்து செல்லும் போது பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள் கீழே விழுந்து காயம் அடையும் சம்பவங்களும் இங்கு சகஜம்.

ரயில்வே சட்டத்தின் படி தண்டவாளத்தை கடப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனால், இங்கு அதிகாரிகளுக்கு நன்கு தெரிந்தே இந்த அவலம் நாள்தோறும் அரங்கேறி வருகிறது.

தீர்வு காணப்படுமா?

டவுன் ரயில் நிலையத்தில் நடைமேம்பாலம் அல்லது சுரங்கப் பாதை அமைக்க வேண்டும் என்பது பயணிகளின் நீண்டகால கோரிக்கை.

அது மட்டுமின்றி ரயில் நிலையம் அமைந்துள்ள மிகப்பெரிய குடியிருப்பு பகுதியான தேவதானம் பகுதியில் இருந்து, இன்னொரு குடியிருப்பு பகுதியான சஞ்சீவி நகருக்கு செல்பவர்களும் தண்டவாளத்தை கடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

எனவே, டவுன் ரயில் நிலையத்தில் குடியிருப்புப் பகுதிகளை இணைக்கும் வகையில் நடைமேம்பாலம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

*இருக்கு.. ஆனா இல்லை*

டவுன் ரயில் நிலையத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கழிவறை, திறக்கப்படாமலேயே இருக்கிறது. ஏடிஎம், கேண்டின் இருந்தும் பூட்டப்பட்டிருக்கிறது. சைக்கிள் ஸ்டாண்ட் இல்லை.

கழிவறை, குடிநீர், மின்விளக்கு, பஸ் போக்குவரத்து என அடிப்படை வசதிக்கே அல்லாடும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது, பாரம்பரிய பெருமைமிக்க டவுன் ரயில் நிலையம்.

இங்கிருந்து சென்னைக்கு செல்ல கட்டணம், 150 ரூபாய். ஆனால், இங்கிருந்து ரயில்வே ஜங்ஷனுக்கோ, ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திற்கோ ரயில் ஏறச் சென்றால், ஆட்டோ கட்டணம், 200 ரூபாய்.

எனவே, நகரின் மையப்பகுதியில் உள்ள இந்த ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும்.

பல்லவன் விரைவு ரயில் இங்கே நின்றுச் செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.