Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருவனைக்காவல் கோவில் பிரசாதம் விற்பனையில் ஊழலா?ம.நீ.ம. வழக்கறிஞர் கிஷோர் குமார்

0

“ஏழைகளுக்கு எட்டா கனியான திருவானைக்காவல் திருக்கோவில் பிரசாதம்”

மக்கள் நீதி மய்யத்தின் திருச்சி மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலம் திருச்சி திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரன் – அகிலாண்டேஸ்வரி திருத்தலம். இந்த திருக்கோவிலில் ஆடி மாதம் உலகநாயகி அகிலாண்டேஸ்வரியை தரிசிக்க திருச்சி சுற்று வட்டாரத்திலுள்ள பக்தர்கள் சாரை, சாரையாக வருவது வழக்கம்.

அவ்வாறு வரும் பக்தர்கள் திருக்கோவில் பிரசாதத்தை விரும்பி வாங்குவதுடன் வீட்டில் உள்ளவர்களுக்கும் வாங்கி செல்வர். ஏனெனில் பிரசாதத்தின் சுவை அந்த காலத்தில் அலாதியானது.

தற்பொழுது ஆடி மாதத்தில் அகிலாண்டேஸ்வரியை தரிசிக்க வரும் பக்தர்கள் வசதிக்காக திருக்கோவில் வளாகத்தில் இரண்டு இடங்களில் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் புளியோதரை, சர்க்கரை பொங்கல், வடை உள்ளிட்ட பிரசாதம் விற்கப்பட்டு வருகின்றன. ஆனால் பிரசாதத்தின் அளவை மதிப்பிடும் பொழுது நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையை கேட்டு மிரட்சியாகின்றனர் பக்தர்கள்.

மேலும் மிக சிறிய கன்டெய்னர் பாக்சில் அடைக்கப்பட்ட புளியோதரை மிக அதிகமாக நாற்பது ரூபாய் எனவும், சர்க்கரை பொங்கல் நாற்பது ரூபாய், வடை பத்து ரூபாய் என மிக அதிக அளவில் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது உள்ளபடியே வேதனையளிக்கிறது.

மேலும் இதே அளவுள்ள பிரசாத பொருட்கள் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட ஏனைய திருக்கோவில்களில் பதினைந்து ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்தனைக்கும் திருவானைக்காவல் திருக்கோவிலில் பிரசாதத்தை கோவில் நிர்வாகமே நேரடியாக விற்பனை செய்து வருகிறது. ஆனால் மற்ற திருக்கோவில்களில் வெளி நபர்களுக்கு பிரசாத ஸ்டால் ஏலத்தில் விடப்பட்டுள்ளது. ஆனால் பிரசாத ஸ்டாலை ஏலத்தில் எடுத்தவர்கள் கூட தங்களது லாபத்தை குறைத்து கொண்டு குறைந்த விலையில் விற்கும் பொழுது_ திருவானைக்காவல் கோவில் நிர்வாகம் பிரசாதத்தில் கொள்ளை லாபம் சம்பாத்திக்க நினைப்பது தர்மத்திற்கு எதிரானது.

#மேலும் மேற்படி பிரசாத பொருட்களுக்கு பில், டோக்கன் உள்ளிட்ட எதையும் பிரசாதம் வாங்கும் பக்தர்களுக்கு திருவானைக்காவல் திருக்கோவில் நிர்வாகம் வழங்குவது இல்லை.

அப்புறம் எப்படி பிரசாத விற்பனை தொடர்பான முறையான கணக்கு பரமாரிக்க முடியும்…?

#மேலும் மேற்படி பிரசாத ஸ்டாலில் விலை பட்டியல் இல்லை.

#திருக்கோவிலில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என உத்தரவிட்டு போர்டு வைத்துள்ள திருக்கோவில் நிர்வாகமே, பிளாஸ்டிக் கன்டெய்னரில் தான் பிரசாதங்களை விற்பனை செய்வது கூடுதல் வேதனை.

எனவே இந்து சமய அறநிலைய துறை அமைச்சர், ஆணையர் மற்றும் திருக்கோவில் இணை இணையர் உள்ளிட்ட அதிகாரிகள் ஏழைகளுக்கு எட்டா கனியாக உள்ள திருவானைக்காவல் திருக்கோவில் பிரசாதத்தின் விலையை குறைக்க மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கேட்டுகொள்கிறோம்.

மக்கள் நீதி மய்ய கட்சியின் திருச்சி மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர். கிஷோர்குமார் தனது வருத்தத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

அதிரடி அமைச்சர் என பெயர் எடுத்த அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு உடனடி நடவடிக்கை எடுப்பாரா பொதுமக்கள் எதிர்பார்ப்பு ….

Leave A Reply

Your email address will not be published.