தனியார் பள்ளி மாணவர்கள் 5933 பேர் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர், மாவட்ட கல்வி அலுவலர் விஜயலட்சுமி தகவல்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் படித்த 5933 மாணவர்கள் அரசுப் பள்ளிகளை நாடி வந்துள்ளனர்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி தகவல்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் படித்த 5933 மாணவர்கள் அரசுப் பள்ளிகளை நாடி வந்துள்ளதாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடக்க,நடுநிலை,உயர்நிலை ,மேல்நிலை பள்ளிகள் என மொத்தம் 1966 அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகள்,சுயநிதிப் பள்ளிகள் உள்ளன.
தமிழகத்தில் தற்பொழுது கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. இருப்பினும் கல்வித் தொலைக்காட்சி மூலமாகவும்,வாட்ஸ் அப் மூலமாகவும்,ஆன்லைன் மூலமாகவும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
பள்ளிகளில் புதியதாக மாணவர்சேர்க்கை நடத்த்தப்பட்டு விலையில்லா பாடப்புத்தகங்களும் வழங்கப்பட்டு வருகிறது.
தற்பொழுது அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி அளித்து வருவதால் தனியார் பள்ளிகளில் படித்த தங்களுடைய குழந்தைகளை பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில்
2021-2021 கல்வியாண்டில் முதல் வகுப்பில் 522 மாணவர்களும்,இரண்டாம் வகுப்பில் 560 மாணவர்களும்,மூன்றாம் வகுப்பில் 615 மாணவர்களும்,நான்காம் வகுப்பில் 567 மாணவர்களும்,ஐந்தாம் வகுப்பில் 500 மாணவர்களும், ஆறாம் வகுப்பில் 1364 மாணவர்களும், ஏழாம் வகுப்பில் 292 மாணவர்களும், எட்டாம் வகுப்பில் 313 மாணவர்களும்,ஒன்பதாம் வகுப்பில் 317 மாணவர்களும்,பத்தாம் வகுப்பில் 40 மாணவர்களும்,பதினொன்றாம் வகுப்பில் 776 மாணவர்களும்,பன்னிரெண்டாம் வகுப்பில் 67 மாணவர்கள் என மொத்தம் 5933 மாணவர்கள் தனியார் பள்ளிகளில் படித்தவர்கள் அரசுப் பள்ளியை நோக்கி நாடி வந்துள்ளனர்.
கல்வி மாவட்ட வாரியாக எனில் புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 2304 பேரும்,அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 1999 பேரும் இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் 1630 பேர் என மொத்தம் 5933 மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிக்கு வந்துள்ளனர்.
இந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மொத்தம் 2,83,883 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.இந்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.