இலுப்பூர் அருகே குறைந்த மின்னழுத்தத்தால் சிரமப்பட்டு வந்த பொதுமக்களுக்கு தக்கல் முறையில் பணம் கட்டி புதிய மின்மாற்றி அமைத்துக்கொடுத்த பள்ளித்துணை ஆய்வாளர் கி.வேலுச்சாமி:
போதிய மின்சாரம் கிடைப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே இராப்பூசல் பஞ்சாயத்தில் மேற்க்கத்தியான் பண்ணை என்னும் குக்கிராமம் உள்ளது. இந்த குக்கிராமத்தில் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்.
இவர்கள் வசிக்கும் குடியிருப்புகளில் குறைந்த மின்னழுத்தத்தினால் மின் விசிறிகள் இயங்காமலும், கிரைண்டர் இயக்க முடியாததாலும்,மின் பழுதாலும் பல ஆண்டுகளாக மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
குறைந்த மின்னழுத்தத்தினை போக்கி புதிய மின்மாற்றி அமைக்க பல ஆண்டுகளாக பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கோரிக்கைகள் கானல் நீராகவே இருந்து வந்தது. பொதுமக்கள் கொரோனா தாக்கத்தால் சிரமப்படும் சூழலில் அதே ஊரில் வசிக்கும் பள்ளித்துணை ஆய்வாளராக இருக்கும் கி.வேலுச்சாமி என்பார் பொதுமக்களின் நலன் கருதி புதிய மின்மாற்றி அமைப்பதற்காக தனது சொந்த பணத்தில் தக்கல் முறையில் ரூபாய் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் மின்சாரக் வாரியத்திற்கு செலுத்தினார்.
அதன் பேரில் மின்சார வாரியத்தினர் புதியமின்மாற்றி அமைத்துக்கொடுத்து மின்இணைப்பு வழங்கினார்கள்.இதன் காரணமாக குறைந்த மின்னழுத்தம் சரிசெய்யப்பட்டு அனைத்து குடியிருப்புகளுக்கும் போதிய மின்சாரம் கிடைத்து மின்விசிறிகள், கிரைண்டர், இயங்குகிறது.குறைந்த மின்னழுத்தத்தால் அடிக்கடி மின் பழுது ஏற்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் வசிக்கும் உஷா, ஆரஞ்சி ஆகியோர் இது பற்றி கூறியதாவது: கொரோனாவினால் கடந்த ஒரு வருடத்திற்கு மேல் வேலை வாய்ப்பு இன்றி நாங்கள் சிரமப்பட்டு வந்த சூழலில் குறைந்த மின்னழுத்தத்தினால் மிகவும் அவதிப்பட்டோம்.பள்ளித்துணை ஆய்வாளராக இருக்கும் கி.வேலுச்சாமி தனது சொந்த பணத்தினை செலுத்தி புதிய மின்மாற்றி அமைத்து கொடுத்ததன் காரணமாக எங்களுக்கு போதிய மின்சாரம் கிடைக்கிறது.இதற்காக அவருக்கும், மின்சார வாரியத்திற்கும் , தமிழக அரசுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்றனர்.
குறிப்பாக அந்த குக்கிராமத்தினைச்சேர்ந்த பள்ளித்துணை ஆய்வாளராக இருக்கும் கி.வேலுச்சாமி 300 க்கும் மேற்பட்ட பயனுள்ள மரக்கன்றுகளை நட்டு பாதுகாத்து வருகிறார்.அதேபோல அந்த குக்கிராம மக்களும் அவரை பின்பற்றி நூற்றுக்கணக்க்கான பயனுள்ள மரங்களை நட்டு பாதுகாத்து வருகிறார்கள்.
பார்ப்பதற்கு அந்த குக்கிராமம் பசுமை முன்னோடி கிராமமாக காட்சியளிப்பது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதே போல நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ள படித்த இளைஞர்களும், அரசு வேலையில் இருப்பவர்களும் தாங்களும் பயனுள்ள மரக்கன்றுகளை நட்டு கிராமத்தில் உள்ளவர்களையும் மரக்கன்றுகளை நட ஊக்கப்படுத்தினால் இந்தியா உலகளவில் சிறப்பான சுற்றுச்சூழலை பெற்ற முதன்மை நாடாக மாறும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.