கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இதற்கிடையில் ஏழை மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதற்காக தினமும் 2 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கும் திட்டத்தை கடந்த அதிமுக அரசு கொண்டு வந்தது.
இந்த திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைந்தனர்.
அந்தத் திட்டம் தற்போது முடிவடைந்திருப்பதால் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நடப்பு கல்வி ஆண்டிலும் ஆன்லைன் வகுப்பு முறையே தொடரும் நிலையில் இலவச 2 ஜிபி டேட்டா திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என கல்லூரி மாணவ, மாணவிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், 2 ஜிபி இலவச டேட்டா திட்டம் செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
வகுப்புகள் இணைய வழியிலே நடக்கும் சூழல் இருப்பதால், 2 ஜிபி இலவச டேட்டா திட்டம் செயல்படுத்த வேண்டும் எனும் மாணவர்களின் கோரிக்கை நியாயமானது. கல்வி நிலையங்கள் திறக்கும் வரை தமிழக அரசு இலவச டேட்டா வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.