கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில், மாநிலம் முழுவதும் கடந்த மாதம் 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பால், மருந்து, குடிநீர் தவிர வேறு எந்த விநியோகத்திற்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
காய்கறி வண்டிகள் மூலம் தெருக்களில் காய்கறி வியாபாரம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் ஊரடங்கு காலத்தில் கேபிள் டி.வி. வசதியை தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படாத வகையில் தடையின்றி வழங்குவதற்காக கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு பணி செய்ய அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இது குறித்து முதல்-அமைச்சர் ஸ்டாலின், அதற்கான துறை சார்ந்த அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனை தொடர்ந்து இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ், இன்று முதல் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மற்றும் தொலைத்தொடர்பு பணியாளர்கள் வெளியே சென்று பணியாற்றலாம் என்று தெரிவித்துள்ளார்.
பணி தொடர்பாக மட்டுமே வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், சோதனைச் சாவடிகளில் அடையாள அட்டையை காண்பித்து கேபிள் ஆபரேட்டர்கள் மற்றும் தொலைத்தொடர்பு பணியாளர்கள் தங்கள் பணியை மேற்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.