சீனாவில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருவதாக அண்மையில் ஆய்வு முடிவு வெளியானது.
அதன் படி 2000 முதல் 2010ஆம் ஆண்டு வரை சீனாவின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 0.57 சதவீதமாக இருந்தது. இந்த அளவு 2010 முதல் 2020 வரையிலான 10 ஆண்டுகளில் 0.53சதவீதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மொத்த மக்கள்தொகையில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையும், 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.
ஆனால் 15 முதல் 59 வயதிற்குட்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக சரிந்திருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
தலைகீழ் வயது கட்டமைப்பு காரணமாக சுருங்கி வரும் மக்கள் தொகை சிக்கலாக அமையும். சீனாவில் இளைஞர்களை விட வயதானவர்கள் அதிகம்.
எதிர்காலத்தில் வயதானவர்களுக்கு ஆதரவளிக்க போதுமான தொழிலாளர்கள் இருக்க மாட்டார்கள், மேலும் உடல்நலம் மற்றும் சமூகப் பாதுகாப்புக்கான தேவை அதிகரிக்கும்.
நாடு மிகவும் வளர்ச்சியடையும் போது, கல்வி அல்லது பிற முன்னுரிமைகள் காரணமாக பிறப்பு விகிதங்கள் வீழ்ச்சியடையும்.
இந்த நிலையில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்ததை அடுத்து குழந்தை பிறப்பை ஊக்குவிக்க சீன அரசு முடிவு செய்தது. இந்நிலையில், சீனாவில் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அரசு அனுமதித்துள்ளது.
மக்கள் தொகை பெருக்கத்தை குறைக்க பல ஆண்டுகளுக்கு முன் வீட்டுக்கு ஒரு குழந்தை என்ற திட்டத்தை சீனா அமல்படுத்தியது.
சீனாவில் குடும்பத்துக்கு ஒரு குழந்தை கட்டுப்பாடு அதன் தலைவர் மாவோ காலத்திலேயே ஆரம்பித்துவிட்டது. ஆனால் அவர் இறந்த பின்பே, அது அமலுக்கு வந்தது.
சுமார் 40 ஆண்டுகள் நீடித்த அந்த கட்டுப்பாட்டால் மில்லியன் கணக்கான கட்டாய கருக்கலைப்புகளும், குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டன.
இதையடுத்து, ஒரு குழந்தை திட்டத்தை அடுத்து மக்கள் தொகை கட்டுக்குள் வந்ததால் 2016ல் சீனா கொள்கையை தளர்த்தியது.
அதன்படி குடும்பத்துக்கு 2 குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என 2016ல் தளர்வை சீன அரசு அறிவித்தது. தொடர்ந்து குழந்தை பிறப்பு கொள்கையில் தளர்வை அறிவித்த பிறகும் மக்கள் தொகை எதிர்பார்த்த அளவு அதிகரிக்கவில்லை.
இந்நிலையில், மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்ததை அடுத்து குடும்பத்துக்கு 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள சீன அரசு அனுமதி வழங்கியுள்ளது.