GST கவுன்சில் கூட்டத்தில் பேச போதிய நேரம் வழங்கப்படவில்லை. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு
ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) கவுன்சில் கூட்டம் 3 மாதங்களுக்கு ஒருமுறை நடக்கும்.
ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் 8 மாதங்களுக்கு பிறகு இன்று கூடியது. டெல்லியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் காணொலி காட்சி மூலமாக கூட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில் நிதித்துறை ராஜாங்க மந்திரிகள், மாநில நிதி மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றார்கள்.
தமிழக அரசு சார்பில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முதன் முறையாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:-
முதல் முறையாக ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றேன். ஜி.எஸ்.டி. கவுன்சிலில் ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்கு என்பது ஏற்புடையது அல்ல.
ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் எங்களுடைய மறுப்பை பதிவு செய்து உள்ளோம். தமிழகம் போன்ற பெரிய மாநிலங்களுக்கு பேசுவதற்கான போதிய நேரம் வழங்கப்படவில்லை.
ஜி.எஸ்.டி. கட்டமைப்பை மாற்றவிடால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மாநிலங்களுக்கான நிலுவைத்தொகை வழங்க கடன் வாங்க உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்து உள்ளது. மாநில உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என ஜி.எஸ்.டி கூட்டத்தில் வலியுறுத்தினேன் என கூறினார்.