Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் வசதிகொண்ட படுக்கைகள் எண்ணிக்கை அதிகரிப்பு.

0

கொரோனாவின் 2-வது அலையால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனாவின் முதல் அலையை விட, 2-வது அலையில் பாதிக்கப்படுபவர்களுக்கு நுரையீரல் தொற்றால் மூச்சு திணறல் ஏற்படுகிறது.

இதனால் மாநிலம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது.

சுகாதாரத்துறையின் வேண்டுகோளை ஏற்று பொதுப்பணித்துறை மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிகள், மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிகள், தாலுகா ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த வசதியை மேம்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் சென்னையில் உள்ள பொதுப்பணித்துறையின் தலைமை அலுவலகத்தில் இருந்து ஆக்சிஜன் படுக்கைகள் அமைப்பதற்கு தேவைப்படும் உதிரி கருவிகள் அந்தந்த ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரிகள், மாவட்ட தலைமை ஆஸ்பத்திரி, தாலுகா ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 42 ஆயிரம் படுக்கைகள் உள்ளன. இதில் கடந்த ஆண்டு கொரோனாவின் முதல் அலையின்போது 24 ஆயிரம் படுக்கைககளில் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டது.

இதில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, திருவள்ளூர், காஞ்சீபுரம், சென்னை உள்ளிட்ட 38 மாவட்டங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் கூடுதலாக ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 13 ஆயிரத்து 500 படுக்கை வசதிகள் ஏற்படுத்தும் பணி கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது.

இதில் தற்போதைய நிலவரப்படி 7 ஆயிரம் படுக்கைகளில் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு வந்து உள்ளது.

மீதம் உள்ள படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தும் நிலையில் படுக்கைகளுக்கு ஆக்சிஜனை கொண்டு வரும் காப்பர் குழாய்கள், புளோமீட்டர், ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களை மருத்துவ பணிகள் கழகம் உத்தரவின் பேரில் பொதுப்பணித்துறை ஐதராபாத், பெங்களூரு மற்றும் குஜராத் ஆகிய இடங்களில் இருந்து வாங்கி உள்ளது.

இதனை தற்போது மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிகள் மற்றும் தலைமை ஆஸ்பத்திரிகளில் போர்க்கால அடிப்படையில் நடந்து வரும் பணிகளை முழுமையாக முடிக்க அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள படுக்கைகளில் ஆக்சிஜன் வசதிகள் அமைக்கும் பணி இம்மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Leave A Reply

Your email address will not be published.