இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரங்களை மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8 மணிக்கு வெளியிட்டது. அதன் படி கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 2 லட்சத்து 22 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொற்று பாதிப்பில் இருந்து 3 லட்சத்து 2 ஆயிரத்து 544 பேர் குணம அடைந்துள்ளனர். கொரோனாவுக்கு ஒரே நாளில் 4 ஆயிரத்து 454 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 67 லட்சத்து 52 ஆயிரத்து 447 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2 கோடியே 37 லட்சத்து 28 ஆயிரத்து 11 ஆக இருக்கிறது.
ஆனாலும், கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 3 ஆயிரத்து 720 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 27 லட்சத்து 20 ஆயிரத்து 716 ஆக குறைந்துள்ளது.
இதற்கிடையில், இந்தியாவில் கொரோனா மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுத்தி வரும் நிலையில் பல்வேறு அமைப்புகள் அரசுக்கு உதவிகளை செய்து வருகின்றன. வெளிநாடுகளில் இருந்தும் உதவிகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் கொரோனா தடுப்பு உதவிகளை வழங்கியுள்ளது. அதன் படி, 10 லிட்டர் ஆக்சிஜன் சேமிப்பு திறன் கொண்ட 2 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை அரசுக்கு வழங்குவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இந்தியா மீண்டு வர இந்த சிறு முயற்சியும் உதவியாக இருக்கும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.