தமிழகத்தில் இன்றுமுதல் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 வரை வங்கிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. தினமும் 30,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகளும், 400-க்கும் மேற்பட்ட உயிரிழப்புளும் பதிவாகி வருகின்றன.
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை அடுத்தடுத்து மேற்கொண்டு வருகிறது.
கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் மே 10 முதல் 24 வரை தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியது. ஆனால் மக்கள் சிலர் தேவையில்லாமல் வெளியே சுற்றி ஊரடங்கை மதிக்காமல் இருந்து வந்தனர்.
இதனை தொடர்ந்து வைரஸின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் இன்று முதல் 31-ம் தேதி வரை தமிழகத்தில் தளர்வில்லாத முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பணிகளை தவிர அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பால் பூத், மருந்தகம் தவிர காய்கறி, மளிகை கடைகள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .
அலுவலங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் வங்கிகள் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் கொண்டு இயங்கலாம் என்று தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழக அரசின் அனுமதியை தொடந்து தமிழகத்தில் நாளை முதல் வங்கிகள் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 வரை செயல்படும் என்று மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம் அறிவித்துள்ளது. அரசு உத்தரவின்படி மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களே பணியில் இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. வங்கி ஊழியர்களும், வங்கிக்கு வருபவர்களும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.