கொரோனா தொற்றின் 2வது அலை நாடு முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது பல்வேறு இடங்களில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இதனை தொற்று நோயாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கருப்பு பூஞ்சை நோய் பாதித்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இந்த நோய்க்கு அரசு இலவசமாக சிகிச்சை அளிப்பதுடன், அதற்கு தேவையான மருந்துகள் அதிக அளவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சோனியா காந்தி வலியுறுத்தி உள்ளார்.
இந்த நோயை, ஆயுஷ்மான் பாரத் மற்றும் சுகாதார காப்பீட்டு திட்டங்களில் இடம்பெறவில்லை எனவும், அவற்றை சேர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்கவும் பிரதமர் மோடியை, சோனியா காந்தி வலியுறுத்தி உள்ளார்.