இ-பதிவு முறை இல்லாமல் அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றி திரிந்தவர்களின் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
இதனால் மளிகை மற்றும் காய்கறி கடைகள் காலை 10 மணி வரை மட்டுமே இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்களும், மாவட்டத்திற்குள்ளேயே பயணிப்பவர்களும் கட்டாயம் இ-பதிவு செய்திருக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் திருச்சி மாநகர எல்லையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அவ்வழியாக வந்த கார் இருசக்கர வாகனம், ஆட்டோ போன்றவற்றை நிறுத்தி காவல்துறையினர் இ-பதிவு உள்ளதா என விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது இ-பதிவு செய்யாமல் வந்த வாகனங்களை காவல்துறையினர் திருப்பி எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் அத்தியாவசிய தேவையின்றி இ-பதிவு இல்லாமல் சாலைகளில் சுற்றித் திரிந்தவர்களின் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து திருச்சி கே கே நகர் ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தியுள்ளனர்.
கடும் நடவடிக்கை பின்னரும் திருச்சியில் வாகனப் போக்குவரத்து இருக்கத்தான் செய்கிறது. பொது மக்களாக திருந்தினால் தான் உண்டு